டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றினை சென்னை அணி கிட்டத்தட்ட உறுதி செய்ததுடன் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை அணியும் டெல்லி அணியும் நேற்று (மே, 10) மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிரகாசமான ப்ளே ஆஃப் வாய்ப்பு:
இந்த வெற்றிய்டின் மூலம் சென்னை அணி தனது ப்ளேஆஃப் சுற்றினை கிட்டத்தட்ட உறுதி செய்ததுடன், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இந்த போட்டியில் சென்னை அணி ஒரு தனித்துவமான சாதனையினைப் படைத்திருக்கிறது. அதாவது இந்த போட்டியில் சென்னை அணி சார்பில் மொத்தம் 10 பேர் பேட்டிங் செய்தனர். இவர்கள் அனைவரின் ஸ்கோரின் கூட்டுத்தொகைதான் 167. மொத்தம் 10 பேர் களமிறங்கி 167 ரன்கள் எடுத்து இருந்தாலும் அதில் ஒருவர் கூட 25 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை.
சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே மட்டும் 12 பந்தில் 3 சிக்ஸர் உட்பட 25 ரன்கள் சேர்த்தார். தொடக்க ஆட்டக்காரர் கெய்க்வாட் 24 ரன்கள் சேர்த்து இருந்தார். இவருக்கு அடுத்தபடி அதிக ரன் என்றால் அது, ராயுடு தான், அவர் 17 பந்தில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 23 ரன்கள் சேர்த்து இருந்தார். இறுதில் இறங்கிய தோனி 9 பந்தில் ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர் உட்பட 20 ரன்கள் சேர்த்து இருந்தார்.
புதிய சாதனை:
இவர்கள் அனைவரும் இணைந்து 167 ரன்கள் சேர்த்து இருந்தாலும், டெல்லி அணியை 140 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். ஆனால் டெல்லி அணியின் இரண்டு வீரர்கள் 25 ரன்களுக்கு மேல் எடுத்தனர். அதாவது டெல்லி அணியின் ரஸோவ் 35 பந்தில் 2 பவுண்டரி ஒரு சிக்ஸரும் விளாசி 37 ரன்கள் எடுத்தார். அதேபோல் இவருடன் இணைந்து சிறிய பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்திய மனீஷ் பாண்டே 29 பந்தில் ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர் விளாசி 27 ரன்கள் சேர்த்தார்.
இந்த போட்டியில் சென்னை அணி பெற்றுள்ள வெற்றி மூலம் 25 ரன்களுக்கு மேல், ஒருவர் கூட எடுக்காமல் போட்டியினை வென்றுள்ள அணி என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. 150 ரன்களுக்குள் ரன்கள் எடுத்து போட்டியை வென்ற அணிகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் யாரேனும் ஒரு வீரரோ அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்களோ 25 ரன்களுக்கு மேல் சேர்த்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.