வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட், 12 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பினார். 12 ஆண்டுகளில் 118 டெஸ்ட் போட்டிகளை அவர் தவறவிட்டார். இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய டெஸ்ட் ஆட்டத்தில் முதல் விக்கெட்டை சுருட்டினார். இதுதான் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட் ஆகும்.


இத்தனை ஆண்டுகள் கழித்து முதல் விக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் கைப்பற்றிய இந்தியர் என்ற சாதனையையும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தச் சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் உனத்கட்.


உனத்கட் 12 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 16, 2020 அன்று செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.


இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் 118 டெஸ்ட் போட்டிகளைத் தவறவிட்டார்.  இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் ஜகிர் ஹசன் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் வீசிய 15ஆவது ஓவரில் 5ஆவது பந்து கே.எல்.ராகுல் கைகளில் கேட்ச் ஆனது. அதைத் தொடர்ந்து 41 ஆவது ஓவரில் முஷிஃபிகுர் ரஹிமை வீழ்த்தினார். மொத்தம் 16 ஓவர்களில் வீசி அதில் 2 மெய்டன் ஓவர்களுடன், 50 ரன்கள் விட்டுக் கொடுத்து, 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் உனத்கட்.






இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்றது. 


இந்தநிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று டாக்கா மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற ஏதுவாக இருக்கும். 


யார் கேப்டன்..?


வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஸ்லிப்பில் பீல்டிங் செய்யும் போது ரோஹித் சர்மாவின் கட்டை விரலில் மோசமான காயம் ஏற்பட்டது. அதனால் காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் இருந்து விலகினார். கேஎல் ராகுல் கேப்டனாகவும், சேட்டேஷ்வர் புஜாரா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். ரோஹித் சர்மா இன்னும் விளையாட தகுதியற்ற நிலையில், கேஎல் ராகுல் மீண்டும் மிர்பூரில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.


இந்தியா அபார ஃபார்ம்:


முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சட்டோகிராமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. 


இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் வங்கதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.


முதல் நாள் முடிவில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மோமினுல் 84 ரன்களை விளாசினார். இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 8 ஓவர்கள் முடிவில் 19 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கே.எல்.ராகுல் 3 ரன்களும், சுபமன் கில் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.