இந்திய கிரிக்கெட் அணியோ அல்லது சர்வதேச கிரிக்கெட் அணியோ அது எதுவானாலும், அந்தந்த அணிக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் பெரும் கனவாக இருப்பது, டெஸ்ட் அணிக்காக விளையாட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அதனை அடையும் வரை மற்ற கிரிக்கெட்டில், அதாவது டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடி பெரும் மகிழ்ச்சியையும், திருப்தியையும் விட டெஸ்ட் கிரிக்கெட்டில் நாள் முழுவதும், மைதானத்தில் நிலைத்து நின்று தனது திறமையைத் தொய்வில்லாமல், அணிக்காக பயன்படுத்தி அதன்மூலம்  கிடைக்கும் வெற்றியை அனைத்து கிரிக்கெட் வீரர்களும் விரும்புவர். 


மற்ற வகை கிரிக்கெட்டுகளை மொத்தமாக தவிர்த்துவிட்டு டெஸ்ட் போட்டித் தொடர்களில் மட்டும் களமிறங்கி உலகினை தன்பக்கம் ஈர்க்கும் கிரிக்கெட் ஜாம்பவான்கள்  அனைத்து சர்வதேச கிரிக்கெட் அணியிலும் இருக்கத்தான் செய்க்கிறார்கள். ஆனால் ஒருவருக்கு அப்படியான டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு பின்னர் எந்தவிதமான காரணமுமே இல்லாமல் 12 ஆண்டுகள் அணியில் சேர்க்கப்படாத வீரருக்கு எத்தனை ஆறுதல் கூறினாலும் அது புறக்கணிக்கப்பட்ட ஒரு வீரனின் வலிக்கு ஈடாகுமா? அப்படி புறக்கணிக்கப்பட்ட வீரன் இந்திய அணியில் தனக்கான இடத்தினை நிலைநிறுத்த விடாமால் போராடும் போராட்ட குணத்தினையுடையவன் கடந்து வந்த லட்சியப்பாதை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.  


ஜெய்தேவ் உனத்கட்... இந்த பெயரை பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். ஏனென்றால் அந்த வீரன் கடந்து வந்த பாதை ஒரு அமைதியான தவ வாழ்வு. முதன்முதலாக இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில், அவர் விக்கெட் எதுவும் எடுக்காமல், 101 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியிலேயே 101 ரன்கள் கொடுத்துவிட்டேன் என்ற வருத்தம் உதன்கட்டிற்கு இருந்தது. விமர்சனங்கள் வெளியில் இருந்து சராமாரியாக வந்தாலும், 19 வயது வீரனுக்கு பெரும் சங்கடத்தை தந்தது. ஆமாம் இந்திய அணிக்காக அவர் அறிமுகமாகும் போது உனத்கட்டிற்கு 19 வயது தான். ரன்களை கொடுத்து விட்டோம் என தனக்குள் வருத்தம் இருந்தாலும், சர்வதேச கிரிக்கெட் வீரர்களைக் கண்டோ அல்லது ஜாம்பவான்களுக்கு மத்தியில் என்ன செய்யப்போகிறோம் என்றோ உதன்கட்டிற்கு பயம் இருக்கவில்லை. 






ஆனால் அந்த போட்டிக்குப் பின்னர் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க மேலும், 3 ஆண்டுகள் ஆனது. அதுவும் ஒருநாள் தொடர். அவர் இந்திய அணி 2013ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடும் போது உனத்கட் களமிறக்கப்பட்டார். மேலும், அந்த ஆண்டே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் கழட்டி விடப்பட்டார். மொத்தம் 7 ஒருநாள் போட்டிகளில் 8 விக்கெட் எடுத்துள்ளார்.  அதிலும் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது எக்கானமி 4.02 ரன்கள். அதேபோல், டி20 போட்டிகளில் 2016ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி, 2018ல் வங்காள தேசத்துக்கு எதிராக தனது கடைசி டி20 போட்டியில் விளையாடியுள்ளார். மொத்தம் 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டி20 சர்வதேச போட்டிகளில் அவருடைய எக்கானமி 8.68 ஆகும். 


ஐபிஎல் போட்டிகளில் மட்டும் இதுவரை 91 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதி அவரது சிறந்த பந்து வீச்சாக 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதில் அவருடைய எக்கானமி 8.79ஆக உள்ளது. இப்படியான ஒரு விரர் 12 ஆண்டு 2 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் களமிறங்கியுள்ளார். இப்படி மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு களம் இறங்கும் இரண்டாவது வீரர் இவர். இவருக்கு  முன் லாலா அமர்நாத் ஒரு டெஸ்ட்டுக்கும் மற்றொரு டெஸ்ட்டுக்கும் இடையில்  12 ஆண்டுகள் 129 நாடகள் இடைவெளி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


அண்மையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பியில் மிகச்சிறப்பாக செயல்பட்டதற்குப் பின்னர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ள உதன்கட் சிறப்பாக பந்து வீசி வருகிறார். 31 வயது நிரம்பிய உனத்கட்டின் வருங்கால கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துவோம்.