இந்திய அணியின் தேர்வாளராக தான் இருந்தால் சஞ்சு சாம்சனை தேர்வு செய்து இருப்பேன் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
ஐ.பி.எல் 2024:
ஐ.பி.எல் சீசன் 17 இந்தியாவில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் நடைபெற உள்ளது. அதாவது இந்த தொடர் வரும் ஜூன் 1 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய அணியின் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
என்னுடைய முதல் தேர்வு:
முக்கியமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவதற்கு சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரிடம் கடுமையான போட்டி காணப்படுகிறது. அதேபோல் தினேஷ் கார்த்திக் மற்றும் இஷான் கிசனும் இந்த போட்டியில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் தேர்வாளராக தான் இருந்தால் சஞ்சு சாம்சனை தேர்வு செய்து இருப்பேன் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசுகையில், “இன்னும் சில வாரங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவுக்கு செல்லவிருக்கும் இந்திய அணியின் விமானத்தில் அவர் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஒரு கேப்டனாக இருந்தும் கௌரவங்கள் வழங்கப்படவில்லை என்ற அழுத்தத்துடன் நிறைய போராடுகிறார். அவர் ரன் எடுக்கும் விதம் மற்றும் பேட்டிங் செய்யும் சூழ்நிலை சிறப்பாக இருக்கிறது. எனவே நான் தேர்வாளராக இருந்தால் டி20 உலக்க கோப்பைக்கான எனது முதல் தேர்வுகளில் அவர் ஒருவராக இருப்பார்” என்று கூறியுள்ளார் கெவின் பீட்டர்சன்.
சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம்:
முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கபடும் வீரராக சஞ்சு சாம்சன் இருக்கிறார். அவருக்கான வாய்ப்பை பிசிசிஐ முறையாக வழங்கவில்லை என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதங்கம். இச்சூலில் கெவின் பீட்டர்சன் இப்படி கூறியிருப்பது டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு அழுத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளது.
சஞ்சு சாம்சன் இந்த ஐபிஎல் சீசனில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 385 ரன்களை குவித்து இருக்கிறார். அதேபோல், இவர் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் ஐபிஎல் சீசன் 17ன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது மேலும் ப்ளேஆப் சுற்றுக்கு கிட்டத்தட்ட தேர்வாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:ICC Men T20 World Cup: விரைவில் வெளியாகவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. விக்கெட் கீப்பருக்கு 5 பேர் போட்டியா..?