உலக செஸ் சாம்பியன்சிப் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருக்கு தமிழ்நாடு சார்பில் ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகையா வழங்கப்பட்டது. 


சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்:


சர்வதேச செஸ் அரங்குகளில் மதிப்புமிக்கதாக கருதப்படும்,  கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்ற இரண்டாவது இளம் வயது வீரரான சென்னையைச் சேர்ந்த 17 வயதான டி குகேஷ், அந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வயது வீரர் என்ற புகழையும் பெற்றுள்ளார். கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஹிகாரு நகமுராவுக்கு எதிராக டிரா செய்த பிறகு டிரா அவரை டைபிரேக் சுற்றுக்கு அனுப்பியிருக்கக் கூடும்.  ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கடைசி நேரத்தில்  இயன் நெபோம்னியாச்சி மற்றும் ஃபேபியானோ கருவானா இடையேயான போட்டியும் கடைசி நிமிடத்தில் டிரா ஆனது. இது குகேஷிற்கு சாதகமாக மாற, கேண்டிடேட்ஸ் சம்பியன் பட்டம் வென்ற இளம் வயது வீரர் என்ற பெருமையை  பெற்றார்.


உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷ்:


சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற இந்த போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் மற்றும் அமெரிக்காவச் சேர்ந்த நகமுராவை எதிர்கொண்டார். போட்டி சமனில் முடிய இருவரும் தலா அரை புள்ளிகளை பெற்றனர். அதன்படி, 14 சுற்றுகளின் முடிவில் குகேஷ் 9 புள்ளிகளையும், நகமுரா 8.5 புள்ளிகளையும் பெற்றனர். இதன் மூலம், உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் போட்டியில் சீனாவைச் சேர்ந்த டிங் லிரென எதிர்கொள்ள இருக்கிறார். அதோடு, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இளம் வீரர் என்ற பெருமையையும் குகேஷ் தனதாக்கியுள்ளார்.


குகேஷின் சாதனைப் பயணம்:


17 வயதான குகேஷ் செஸ் போட்டிகளில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். அவர் 12 வயது, ஏழு மாதங்கள், 17 நாட்களில் இந்தியாவின் இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார். உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை  வெறும் 17 நாட்களில் அவர் தவறவிட்டார். ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் வகித்து வந்த நாட்டின் முதல் நிலை விரர் என்ற பட்டத்தை, 36 ஆண்டுகளுக்குப் பிறகு பறித்து குகேஷ் சரித்திரம் படைத்தார். .


இதுதொடர்பாக பேசிய விஸ்வநாதன் ஆனந்த், “ செஸ் இன்ஜினை பயன்படுத்தாத அணுகுமுறையால் குகேஷ் தனித்துவமனான நபராக இருக்கிறார் என்று நான் யூகிக்கிறேன். இது மிகவும் ஆரோக்கியமான அணுகுமுறை. முக்கிய விஷயம் என்னவென்றால், அவர் இன்ஜின்களைப் பயன்படுத்தவில்லை, இருப்பினும் அவரது பயிற்சியாளர் மூலம் பயனடைந்தார். அப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு வீரர் விளையாடும் திறமையில் கவனம் செலுத்த வேண்டும், பயிற்சியாளர் சிறந்த தகவலை அவர்களுக்கு வழங்க முடியும், ”என மகிழ்ச்ச் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து: 


கனடாவில் நடந்த கேண்டிடேட் செஸ் தொடரை வென்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு குகேஷ் தகுதிபெற்றார். இதையடுத்து, உலக செஸ் சாம்பியன்சிப் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருக்கு தமிழ்நாடு சார்பில் ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகையா வழங்கப்பட்டது.