சவுரவ் கங்குலி இந்தியா உருவாக்கிய சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுகிறார். "கல்கத்தா இளவரசர்" என்று அழைக்கப்படும் கங்குலி ஒரு ஆக்ரோஷமான ஆட்டக்காரராக இருந்தார். அவரது அதிரடியான பேட்டிங் பாணி அவரது கேப்டன்சியிலும் எதிரொலித்தது. MS தோனி மற்றும் கபில் தேவ் ஆகியோர் கோப்பையை வென்ற கேப்டன்கள் ஆனாலும், அவர்களோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு அவர் இந்திய அணிக்காக பெரும் பங்குகளை ஆற்றியுள்ளார். தாதாவின் தலைமையின் கீழ், இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் உயரங்களை எட்டியது. இளைஞர்கள் மீது அவர் ஏற்படுத்திய நம்பிக்கை, அவரது பேட்டிங் யூனிட்டிற்கே ஆக்ரோஷத்தை கடத்தும், அந்த பேட்டிங் ஸ்டைல் என அவர் இந்திய அணிக்கு ஒரு சிம்ம சொப்பனம். இவர் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் சில முக்கிய வெற்றிகள் பல உள்ளன, அவற்றில் பிரதானமானவை இங்கே:


2002 இன் நாட்வெஸ்ட் சீரிஸ் இறுதிப் போட்டி


நாட்வெஸ்ட் பைனலில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, லார்ட்ஸ் பால்கனியில் இருந்து சௌரவ் கங்குலி சட்டையை கழற்றி சுற்றியது பழைய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்போது நினைத்தாலும் கூஸ்பம்ப்ஸ் வரக்கூடிய காட்சி. கங்குலியின் அதிரடி கேப்டன்சி, ஆக்ரோஷமான பேட்டிங், ஆகியவற்றை தாண்டி கொண்டாட்டத்தின் மூலம் பழிவாங்குதலை இந்தியாவிற்கே அறிமுகப்படுத்தியவர் அவர். முகமது கைஃப் மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இரு இளைஞர்கள் தோற்க இருந்த போட்டியை வெல்ல உதவியது குறிப்பிடத்தக்கது.



பாகிஸ்தானை அவர்களது சொந்த மைதானத்தில் வீழ்த்தியது


அப்போது இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஒரே ஒரு டெஸ்ட் தொடர் மட்டுமே ஆடுவார்கள் என்பதால் அந்த தொடரே களைகட்டும். அப்போது 2004-ம் ஆண்டு பாகிஸ்தானில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, 2 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. பின்னர் ராவல்பிண்டியில் இந்தியா பாகிஸ்தானை ஆதிக்கம் செலுத்தியது. அந்த போட்டியில், அவர்களின் சொந்த மைதானத்தில் அவர்களை இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது. ராகுல் டிராவிட் தனது பெயருக்கு நியாயம் செய்வது போல, பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு எதிராக சுவர் போல் நின்று 270 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் மண்ணில் தோற்கடித்தது தாதாவின் பிரபலத்தையும் ரசிகர்களின் ஆதரவையும் உயர்த்தியது.


தொடர்புடைய செய்திகள்: FIR - DIG Vijayakumar : ’இதை எப்படி பயன்படுத்துவது..’ : தனிப்பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி.. வெளியான பரபரப்பு தகவல்கள்


ஈடன் கார்டனில் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றி


2000களில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் உலகின் சிறந்த அணியாக இருந்தது. பயமுறுத்தும் பந்துவீச்சு மற்றும் லெஜண்ட்களின் பேட்டிங் வரிசையுடன் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எப்போதுமே கடினமான பணியாக இருந்தது. ஆனால் இந்தியா அவர்களை தோற்கடித்தது மட்டுமல்லாமல், ஃபாலோ ஆன் எடுக்கும் அளவுக்கு ஆஸ்திரேலியாவை சோதித்தது.அந்த போட்டியில் டிராவிட் (180), விவிஎஸ் லக்ஷ்மண் (281) ஆகியோரின் செயல்பாடுகள் பேட்டிங்கில் பெரும் பலமாக அமைந்தது. அந்த போட்டியில் 13 விக்கெட்டுகளை எடுத்த ஹர்பஜனின் ஹாட்ரிக் பந்து வீச்சில் பெரிதும் உதவியது. இதனால் இந்தியா நினைத்துக் கூடப் பார்க்க முடியாத வெற்றியை பதிவு செய்தது.



பயமுறுத்தும் பாகிஸ்தான் பந்துவீச்சு வரிசையை தோற்கடித்தது


2003 உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்ட போட்டி மற்ற அனைத்து போட்டிகளை விடவும் பெரிதாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 273 ரன்களை குவித்தது. ஆனால் சச்சின் டெண்டுல்கர் 75 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல, ஸ்கோர் எளிதான இலக்காக மாறியது. ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சோயிப் அக்தர் மற்றும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இடையேயான போட்டி இந்த விளையாட்டின் சிறப்பம்சமாக மாறியது. அந்த தருணங்கள் இன்றும் பலர் நினைவில் இருக்கும்.


உலக சாம்பியன்களை அவர்களின் சொந்த மைதானத்தில் தோற்கடித்தது


2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்தியாவுக்கு, அது கிரிக்கெட் பயணத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அடிலெய்டில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 2வது டெஸ்டில் சந்தித்தபோது, இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியை ரசித்தது. இந்திய அணி வெற்றி பெறுவார்கள் என்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், ரிக்கி பாண்டிங் இந்திய அணிக்கு பேட்டிங் கிளாஸ் எடுத்துக்கொண்டிருந்த போட்டியில், இந்திய அணி வென்றது. பாண்டிங் 242 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா அணி 556 ரன்கள் குவித்தது. ஆனால் அதற்குப் பிறகு வந்தது விவிஎஸ் லட்சுமணன் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் இரண்டு தரமான இன்னிங்ஸ்கள். அவர்கள் இருவரும் முறையே 233 மற்றும் 148 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இரண்டாவது இன்னிங்ஸில் அஜித் அகர்கர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.