கோவை சரக டி.ஜ.ஜி.யாக விஜயகுமார் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது முகாம் அலுவலகத்தில் நேற்று காலையில் விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை 6.50 மணியளவில் நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்தபோது, அவருடைய மெய் பாதுகாவலர் ரவி என்பவரிடம் கை துப்பாக்கியை வாங்கி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மன அழுத்தம் காரணமாக விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தேனி மாவட்டம் அணைக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல் துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டு பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் விஜயகுமாரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. பின்னர் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஏடிஜிபி அருண், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே டி.ஜ.ஜி. விஜயகுமார் தற்கொலை தொடர்பாக ஆயுதப்படை காவலர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் ஈரோடு மாவட்ட ஆயுதப்படை முதல் நிலைக் காவலரான ரவிச்சந்திரன் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கோவை சரக டி.ஐ.ஜி.யின் தனிப்பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வருவதாகவும், பாதுகாப்பு அலுவலுக்காக துப்பாக்கி வழங்கப்பட்டு இருந்ததாகவும் தெரியவருகிறது. டி.ஐ.ஜி. விஜயகுமார் கோவை சரகத்திற்கு ஜனவரி மாதம் வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று மாத்திரை எடுத்துக்கொள்வார் என தெரிவித்துள்ளார். நேற்று காலை 6.30 மணிக்கு டி.எஸ்.ஆர் (Daily Situation Report) பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது பால் வாங்கி குடித்துவிட்டு, ரவிச்சந்திரன் தங்கியிருந்த அறையில் இருந்த துப்பாக்கியை எடுத்து எப்படி பயன்படுத்துவது என டி.ஐ.ஜி. விஜயகுமார் கேட்டவாறே அறையில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு ரவிச்சந்திரனும், முகாம் அலுவலக வாகன ஓட்டிநர் அன்பழகன் என்பவரும் ஓடி சென்று பார்த்த போது, தலையில் இரத்த காயத்துடன் டி.ஐ.ஜி. விஜயகுமார் கீழே விழுந்து கிடந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.