ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டி 


ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து தொடர்களை கொண்ட ஆஷஸ் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


இதன் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஹெட்டிங்லே மைதானத்தில்  தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டொக்ஸ் ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா வீரர்கள் முதல் நாளிலேயே 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 118 பந்துகளில் 17 பவுண்டரிகள் 4 சிக்சருடன் 118 ரன்கள் எடுத்தார்.


பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. ஜோ ரூட்(19)  மற்றும் ஜானி பேர்ஸ்டோ (1) களத்தில் நின்றனர்.


மூன்றாவது ஆஷஸ் போட்டியின் இரண்டாம் நாள்


இரண்டாம் நாளான நேற்று ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆட்டத்தை தொடங்கினர். முதல் ஓவரை ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸின் வீச இரண்டாவது பந்திலே வார்னரிடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்துக்கு பெவிலியன் திரும்பினார் ஜோ ரூட்(19). கம்மிங்சின் பந்துவீச்சில் ஜோ ரூட் 10 வது முறையாக அவுட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் ஷாட் பிட்ச் பந்துகளை வீசி, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைப்பதில் மும்முரமாக இருந்தனர். இந்த ஷாட் பிட்ச் பந்தில் மிட்செல் ஸ்டார்கிடம் பழியானவர் பேர்ஸ்டோ.


பென் ஸ்டோக்ஸின் அதிரடி ஆட்டம் 


பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தொடக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அடுத்து வந்த மொயீன் அலி(21), கிறிஸ் வோக்ஸ்(10), ஸ்டூவர்ட் பிராட்(7) ஆகியோர் அடுத்தடுத்து ஆஸ்திரேலியா பந்துவீச்சை தாக்குபிடிக்காமல் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மார்க் வுட் சற்று நேரம் இங்கிலாந்து ரசிகர்களுக்கு மூன்று சிக்சர்கள் அடித்து வானவேடிக்கை காட்டி 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 108 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 80 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார் பென் ஸ்டோக்ஸ். இரண்டாம் நாள் தேனீர் இடைவேளைக்கு முன்பே இங்கிலாந்து அணி 52.3 ஓவரில் 237 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில்  அதிகபட்சமாக 6 விக்கேட்டை வீழ்த்தினார் கேப்டன் பாட் கம்மின்ஸ். அவர் இங்கிலாந்தில் ஐந்து விக்கெட்டுக்கு மேல் எடுத்தது இதுவே முதல் முறை.


இரண்டாம் நாள் முடிவில்


26 ரன்கள் முன்னிலையில் இரண்டாம் நாள் பாதியிலேயே இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரை வந்த வேகத்திலேயே திருப்பி அனுப்பி வைத்தார் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் அடுத்தடுத்து மொயீன் அலியிடம் தனது விக்கெட்டை தாரை வார்த்து கொடுத்து விட்டு சென்றனர். இந்த விக்கெட்டின் மூலம் 200 விக்கெட்டை வீழ்த்திய 16 வது இங்கிலாந்து பவுலர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஆனார். களத்தில் நின்ற மற்றொரு தொடக்க ஆட்டகாரர் கவாஜாவும் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களுடன் மொத்தம் 141 ரன்கள் முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடனும் பிட்செல் மார்ஷ் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.