இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றது. கோலி, ரோகித் போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
டி-20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட நிலையில், கேப்டன் ரோகித் சர்மா, கோலி ஆகியோர், ஒருநாள் தொடருக்காக மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
பும்ரா விலகல்?
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட்டில் போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளார். இதன் காரணமாக டி20 உலகக் கோப்பையிலும் பும்ரா விளையாடவில்லை. பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவ கண்காணிப்பில் இருந்தவர், தொடர்ந்து பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் சேர்க்கப்பட்டார். இதன் மூலம், இந்திய அணியின் பந்துவீச்சு மீண்டும் வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பும்ரா முழு உடல் தகுதியை பெறாத காரணமாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் இந்த தொடரில் அவர் விளையாடுவது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
உலகக்கோப்பை தொடருக்காக ஓய்வு?
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக பும்ரா விளையாடினார். அதைதொடர்ந்து, அவர் இன்றி களமிறங்கிய இந்திய அணி, ஆசியகோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை தொடரில் தோல்வியை தழுவியது. அதைதொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது. ஆனால், காயத்தில் இருந்து மீண்டதும் உடனடியாக பும்ராவை அணியில் சேர்த்ததற்கு பலர் கவலை தெரிவித்தனர். இந்நிலையில், அண்மையில் நடந்த பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்தில், ஒருநாள் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு, ஐபிஎல் மற்றும் அடுத்தடுத்து நடைபெற உள்ள தொடர்களில், இந்தியாவின் நட்சத்திர வீரர்களின் உடல் தகுதியின் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து, பும்ரா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.