ஹாரி புரூக் சாதனை:


முல்தான் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் கேப்டன் ஷான் மசூத், அப்துல்லா ஷபிக் மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் சதம் விளாச பாகிஸ்தான் அணி 556 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. அதன்படி, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 823 ரன்கள் எடுத்து டிக்ளெர் செய்துள்ளது. 


முன்னதாக, 4 வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோ ரூட் - ஹாரி புரூக் இருவரும் 454 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தனர். பின்னர் ஜோ ரூட் 375 பந்துகளில் 262 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுபக்கம் நின்றிருந்த ஹாரி புரூக் 250 ரன்களை கடந்தும் அதிரடியாக விளையாடினார். ஆட்டத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் எடுத்து கொண்ட ஹாரி புரூக் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முச்சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.





இந்தநிலையில் சயீம் அயூப் வீசிய பந்தில் எளிதாக ஒரு பவுண்டரியை விளாசி 310 பந்துகளில் 3 சிக்ஸ், 29 பவுண்டரி உட்பட 300 ரன்களை விளாசி புதிய சாதனை படைத்தார் ஹாரி. இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக முச்சதம் விளாசிய 6வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹாரு புரூக்.






இதற்கு முன்னதாக கடந்த 1965 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜான் எட் ரிச் 310 ரன்கள் விளாசி இருந்தார். பின்னர் எந்த ஒரு இங்கிலாந்து அணி வீரரும் இந்த சாதனையை செய்யவில்லை. தற்போது சுமார் 59 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹாரி புரூக் இச்சாதனையை செய்திருக்கிறார்.