இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர். இவரது தலைமையில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை யார் என்பதற்கான ஐ.சி.சி. நடத்திய போட்டி பட்டியலில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத்கவுர், தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா மற்றும வங்காளதேச கேப்டன் நிகர் சுல்தானா மூன்று பேரும் இருந்தனர்.


இந்த நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதை ஹர்மன்பிரீத்கவுர் பெற்றுள்ளார். இந்த விருதை வென்ற ஹர்மன்பிரீத் கவுர் கூறியிருப்பதாவது, இந்த விருதுக்கு என்னை பரிந்துரைத்ததே மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த விருதை வென்றது அற்புதமான உணர்வாக உள்ளது. ஸ்மிரிதி மந்தனா மற்றும் நிகர் சுல்தானா ஆகியோருடன் போட்டியிட்டு வெற்றியாளராக வருவதை தாழ்மையுடன் ஏற்கிறேன்.






எனது நாட்டை பிரதிநிதிப்படுத்துவதில் நான் எப்போதும் பெருமை கொள்கிறேன். இங்கிலாந்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள் தொடரை வென்றது எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் ஆகும். ஐ.சி.சி. சிறந்த வீராங்கனையாக இந்த மாதத்திற்கு தேர்வானது தனி மனிதராகவும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் எனக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம் ஆகும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ஹர்மன்பிரீத் கவுர் 124 ஒருநாள் போட்டிகளில் 5 சதங்களும், 17 அரைசதங்களும் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் 3 ஆயிரத்து 322 ரன்கள் எடுத்துள்ளார். 135 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம் மற்றும் 8 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 647 ரன்கள் விளாசியுள்ளார். 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 38 ரன்கள் எடுத்துள்ளார்.






சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்மன்பிரீத்கவுர் டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு சென்ற இந்திய மகளிர் அணி முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.


மேலும் படிக்க : ICC World Test Championship: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்கிறதா பாகிஸ்தான்...? பிரகாசமாகும் வாய்ப்பு..!


மேலும் படிக்க : AUS vs ENG: மார்க் வூட்டை கேட்ச் பிடிக்கவிடாமல் தடுத்த மேத்யூ வேட்... ட்விட்டரில் வெளுக்கும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ...!