இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, செர்பிய நடிகையான நடாசா ஸ்டான்கோவிச்சை இந்து முறைப்படி மீண்டும் திருமணம் செய்துள்ளார்.


பாண்ட்யா - நடாசா மீண்டும் திருமணம்


கடந்த 2020ம் ஆண்டு எளிய முறையில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில், பாண்ட்யா மற்றும் நடாசாவின் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிறித்துவ முறைப்படி தனது திருமணத்தை புதுப்பித்துக்கொண்ட இந்த தம்பதி,  அதைதொடர்ந்து இந்து முறைப்படியும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். காதலர் தினமான கடந்த 14ம் தேதியன்று, உதய்பூரில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.






முத்தமிட்டுக்கொண்ட புதுமண தம்பதி:


திருமணத்தின் ஒரு பகுதியாக மாலைகளை மாற்றிக்கொள்ளும் வர்மலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, உறவினர்களுக்கு மத்தியில் மேடையில் நின்றிருந்த புதுமண தம்பதிகள், இந்தி பாடல் ஒன்றிற்கு நடனமாடியாவாறு, ஒருவருக்கு ஒருவர் இரண்டு முறை அன்பு பொங்க உதட்டில் முத்தமிட்டுக் கொண்டனர். கண்களை கவரும் விதமான லெஹங்கா மற்றும் ஷெர்வானி அணிந்திருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அவர்களுக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


திருமணம் தொடர்பான பதிவு:


திருமணம் தொடர்பாக பாண்ட்யா வெளியிட்டுள்ள பதிவில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் எடுத்த சபதத்தை புதுப்பித்து இந்த காதல் தீவில் காதலர் தினத்தை கொண்டாடினோம். எங்கள் அன்பைக் கொண்டாட எங்களுடன் எங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் இருப்பதில் நாங்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.


பாண்ட்யா - நடாசா காதல்:


பாண்ட்யா - நடாசா முதல்முறையாக கடந்த 2020ம் ஆண்டு சந்தித்தனர். இருவரும் உடனடியாக காதல் வயப்பட்ட நிலையில், துபாயில் சொகுசு கப்பல் ஒன்றில் பாண்ட்யா தனது காதலை வெளிப்படுத்தினார். அதைதொடர்ந்து, நடாசா கருவுற்றதை அறிவித்த பாண்ட்யா, அதே ஆண்டின் மே மாதத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு ஜூலை மாதத்தில் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு அகஸ்தியா என பெயர் சூட்டினர். இந்நிலையில் தான் அவர்கள் மீண்டும் கிறித்துவ மற்றும் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதனிடையே, காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஹர்திக் பாண்ட்யா, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல்-ரவுண்டராக உருவெடுத்துள்ளார். டி-20 அணிக்கு தற்காலிக கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.