ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெல்லியில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில் வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் கவாஜாவை தனது வேகத்தால் மிரட்ட தொடங்கினார் சிராஜ். இன்னிங்ஸின் நான்காவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். மூன்றாவது பந்தில் டேவிட் வார்னர் நேராக ஷாட் ஆடினார். இந்த பந்தை சிராஜ் நிறுத்த முயன்றபோது, அவரது கையில் பட்டு ரத்தம் வந்தது. சிறிதுநேரத்திற்கு பிறகு கட்டுடன் உள்ளே வந்த சிராஜ், இரண்டு தொடக்க வீரர்களையும் மிரட்ட தொடங்கினார்.
சிராஜ் வீசிய பந்தானது உஸ்மான் கவாஜாவின் உடலையும், வார்னரின் முழங்கை மட்டும் ஹெல்மெட்டை தாக்கியது.
தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த 44 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த வார்னர் முகமது ஷமி பந்தில் பாரத்-திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தற்போது, ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களுடன் விளையாடி வருகிறது.
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத்(விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), டாட் மர்பி, நாதன் லியான், மேத்யூ குஹ்னெமன்