இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. 2016ஆம் ஆண்டு முதல் இவர் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். சமீபத்தில் இவருடைய காயம் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக இந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் இவர் சரியாக விளையாடவில்லை. அதைத் தொடர்ந்து நியூசிலாந்து தொடருக்கான அணியில் இவர் இடம்பெறவில்லை. அத்துடன் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியிலும் இவர் இடம்பெறவில்லை. 


 


இந்நிலையில் அவர் காயத்தில் குணமடைந்து வருகிறார். காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விஜய் ஹசாரே தொடரில் இடம்பெறவில்லை. இந்தச் சூழலில் இவர் மும்பையில் ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த ரசிகர்களுடன் இவர் செல்ஃபி எடுத்துள்ளார். அந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் ஹர்திக் பாண்டியாவின் தோளில் கை போட்டுள்ளார். அந்த கையை ஹர்திக் பாண்டியா தட்டிவிட்டுள்ளார். 


 






இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சிலர் இது மிகவும் மோசமான நடத்தை என்று பதிவிட்டுள்ளனர். மற்றொரு பிரிவினர் ஹர்திக் பாண்டியா கொரோனா நெறிமுறைகளை சரியாக பின்பற்றவே அப்படி செய்திருக்கிறார் என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் யாராக இருந்தாலும் அவருடைய அனுமதியின்றி அவரை தொடுவது மிகவும் தவறான செயல் என்றும் சிலர் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 


இருப்பினும் இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்டியாவிற்கும் சர்ச்சைகளும் புதிதல்ல. இதற்கு முன்பாக ஹர்திக் பாண்டியா காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைக்கு உள்ளானார். அதன்பின்னர் தற்போது பொதுவெளியில் அவருடைய நடத்தை காரணமாக மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: கிரிக்கெட்டுக்குள் ஒரு சுவாரஸ்யம்.. பாக்சிங் டே டெஸ்டுக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா?