உலக கிரிக்கெட் வரலாற்றில் எப்போதும் சிலருக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணிக்காக டி20, 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று தந்தவருமானவர் தோனி. அவரது கேப்டன்சியும், விக்கெட் கீப்பிங் திறமையும், அதிரடி பேட்டிங்கும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.


சிறுபிள்ளைத்தனமான கேள்வி:


இந்த சூழலில், பாகிஸ்தான் நாட்டின் பிரபல பத்திரிகையாளரும். கிரிக்கெட் விமர்சகருமான பரீத்கான் அவரது எக்ஸ் பக்கத்தில் தோனியா? ரிஸ்வானா? இவர்களில் யார் சிறந்தவர் என்பதை நேர்மையாக சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


அவரது இந்த கேள்விக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு பதில் அளித்து வரும் சூழலில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் ஆவேசம் அடைந்துள்ளார். அவர் பரீத்கானை டேக் செய்து, இது என்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி.  ரிஸ்வானை விட தோனி முன்னோக்கி உள்ளார்.  ரிஸ்வானிடம் நீங்கள் கேட்டாலே அவர் உங்களுக்கு நேர்மையான பதிலைச் சொல்வார். எனக்கு ரிஸ்வானை பிடிக்கும். அவர் நல்ல வீரர். அவர் எப்போதும் சிறப்பாக ஆடக்கூடியவர். ஆனால், இந்த ஒப்பீடு தவறானது. இன்றும் உலக கிரிக்கெட்டில் தோனி நம்பர் 1 வீரர். ஸ்டம்பிற்கு பின்னால் அவரை விட சிறந்தவர்கள் யாருமே கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.






ஒப்பீடு:


தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 256 கேட்ச்களும், 38 ஸ்டம்பிங்கும் செய்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 321 கேட்ச்களும், 123 ‘ஸ்டம்பிங்கும் 350 ஒருநாள் போட்டிகளில் செய்துள்ளார்.


ஆனால், ரிஸ்வான் 30 டெஸ்ட் போட்டிகளில் 78 கேட்ச்களும், 3 ஸ்டம்பிங்கும் செய்துள்ளார். 74 ஒருநாள் போட்டிகளில் 76 கேட்ச்களும் 3 ஸ்டம்பிங்கும் செய்துள்ளார். தோனி டெஸ்ட் போட்டிகளில் 4 ஆயிரத்து 876 ரன்களும் ( 6 சதம், 1 இரட்டை சதம், 33 அரைசதம்), ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரத்து 773 ரன்களும் ( 10 சதங்கள், 73 அரைசதங்கள்) எடுத்துள்ளார். டி20களில் 1617 ரன்களும், ஐ.பி.எல். போட்டிகளில் 24 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 243 ரன்களும் எடுத்துள்ளார்.


ரிஸ்வான் டெஸ்ட் போட்டிகளில் 1616 ரன்களும்,(2 சதம், 9 அரைசதம்) ஒருநாள் போட்டிகளில் 2 ஆயிரத்து 88 ரன்களும் (3 சதம், 13 அரைசதம்), 102 டி20 போட்டிகளில்  3 ஆயிரத்து 313 ரன்களும் ( 1 சதம், 29 அரைசதம்) எடுத்துள்ளார்.