2021 டி20 உலகக்கோப்பை முடிந்துள்ள நிலையில், 2024 முதல் 2031 வரையிலான 8 ஐசிசி கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில், 2026 டி20 உலகக்கோப்பையும், 2029 சாம்பியன்ஸ் டிராபியும், 2031 உலகக்கோப்பையும் இந்தியாவில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2014 முதல் 2031 வரையிலான காலக்கட்டத்தில், 8 ஐசிசி தொடர்கள், 14 வெவ்வேறு நாடுகளில் நடைபெற உள்ளது. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, தென்னாப்ரிக்கா, ஜிம்பாவே, நமீபியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து. அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வங்கதேசம் ஆகிய 14 நாடுகளில் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடக்க இருக்கும் 2016 டி20 உலகக்கோப்பை இலங்கையுடனும், 2031 - 50 ஓவர் உலகக்கோப்பையை வங்கதேசத்துடனும் தொகுத்து வழங்க இருக்கிறது.
இந்தநிலையில், 2025 ம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பை சர்வதேச கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் நாட்டிற்கு வழங்கியுள்ளது. கடைசியாக 1996 ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பை தொடரை இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தியது. இதன் பிறகு அந்த நாட்டில் எந்தவொரு தொடரும் நடந்தப்படவில்லை.
மேலும், பாகிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற இருந்த தொடரை நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்தனர். தொடரை ரத்து செய்தது மிக பெரிய வருத்தமளிப்பதாக பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடரை பாகிஸ்தான் நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 1996 ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபியை நடத்துகிறது. இது மிகவும் பெருமையாகவும்,மகிழ்ச்சியையும் தருகிறது. இந்த செய்தியானது பாகிஸ்தான் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. நாங்கள் இந்த போட்டியை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி எங்களது திறமையை வெளிப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்