இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது. இதைத் தொடர்ந்து இந்திய அணி  நியூசிலாந்து  அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை, நவம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா கேப்டனாகவும், கே.எல்.ராகுல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். விராட் கோலிக்கு இந்த தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டது.


டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். அதேபோல் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலமும் டி20 உலகக் கோப்பையுடன் நிறைவடைந்தது. இதனால் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவும், இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் இந்தத் தொடரில் முதல் முறையாக செயல்பட உள்ளனர். இந்நிலையில், டிராவிட் மற்றும் ரோஹித் முதல் முறையாக காணொளி காட்சி வாயிலாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.






அப்போது பேசிய டிராவிட், “இது கடினமான காலம். அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் சரியான ஓய்வு இருப்பது அவசியம்.  உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வீரர்களை மதிக்க வேண்டும். வீரர்கள், அவர்களுக்கு தேவையான ஓய்வை எடுத்து கொள்கிறார்களா என்பதை நான் உறுதி செய்ய வேண்டும். டெஸ்ட். ஒரு நாள், டி20 என ஒவ்வொரு ஃபார்மெட்டுக்கும் ஒவ்வொரு அணியை தயார் செய்வது எனது திட்டமில்லை. அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டும் முக்கியமானதுதான்.  அடுத்து ஐசிசி தொடர் வர இருக்கும் நிலையில், அதற்காக தயார் செய்து கொள்வது அவசியமாகிறது. அணியை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக முன்னேற்றம் தேவை. 


கிரிக்கெட் விளையாட்டில் பணிச்சுமை மேலான்மை மிக முக்கியமானது. நமது வீரர்கள் ஃபிட்டாக இருக்க என்ன செய்ய வேண்டுமே, அதை செய்ய வேண்டும். அதற்கு ஏற்றவாறு திட்டமிடல் வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த சீரீஸில் சிறப்பாக விளையாட வேண்டும்.” என தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து பேசிய ரோஹித் ஷர்மா, “இந்திய அணி வீரர்கள் பயமின்றி ஆடலாம். ஒரு அணியில் ஆல்-ரவுண்டரின் பங்கு மிக முக்கியமானது. தேவைக்கு ஏற்ப, ஒவ்வொரு வீரரும் அவர்களது பொறுப்புகளை மாற்றி கொள்ள வேண்டும். விராட் கோலி மிக முக்கியமான வீரர். அவர் அணிக்கு திரும்பு நேரம், இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேரும்” என தெரிவித்தார்.


அணி விவரம்:


இந்தத் தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் பட்டேல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அனுபவ தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் டி20 உலகக் கோப்பையை போல் இந்தத் தொடருக்கும் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அதேபோல் ஜடேஜா, பும்ரா, ஷமி உள்ளிட்டவர்களுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் விவரம் கீழ் வருமாறு:


ரோகித் சர்மா(கேப்டன்),கே.எல்.ராகுல்(துணை கேப்டன்),இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர்,ரவிச்சந்திரன் அஸ்வின், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், யுஸ்வேந்திர சாஹல்,புவனேஸ்வர் குமார்,ஹர்சல் பட்டேல்,அவேஸ் கான், தீபக் சாஹர், முகமது சிராஜ்,அக்சர் பட்டேல்,ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 


மேலும் படிக்க: ICC Announcement: இந்தியாவில் 2 உலகக்கோப்பை தொடர்கள்: 2024 - 2031 ஐசிசி தொடர் அட்டவணை முழு விவரம் வெளியீடு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 பேஸ்புக் பக்கத்தில் தொடர


 ட்விட்டர் பக்கத்தில் தொடர


 யூட்யூபில் வீடியோக்களை காண