முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.


இந்திய கிரிக்கெட் அணியின் வரலாறு எழுதப்படும் போதெல்லாம், முழு அத்தியாயத்திலும் யுவராஜ் சிங் என்னும் பெயர் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்காது. இந்திய அணி கடந்த 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையும் வென்றதற்கு முக்கிய காரணம் அல்லது ஒரே காரணம் இவர் என்றே சொல்லலாம். இவர் இத்தனை செய்தும் யுவராஜ் சிங்கிற்கு உரிய மரியாதையான பிரியாவிடை கிடைக்கவில்லை. 


12க்கும் யுவராஜுக்கும் உள்ள பிணைப்பு: 


யுவராஜ் சிங் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எப்போதும் ஜெர்சி எண் 12 ஐ மட்டுமே அணிவார். அதற்கு ஒரே காரணம் அவருக்கும் 12ம் எண்ணிற்கு உள்ள பிணைப்பு. யுவராஜ் சிங் வருடத்தின் கடைசி மாதமான 12வது மாதத்தில் டிசம்பர் 12ம் தேதி பிறந்தார். அவர் பிறந்த நேரம் 12 ஆகும்.  இவர் பிறந்த சண்டிகரில் உள்ள மருத்துவமனை செக்டார் 12ல் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


யுவராஜ் சிங்கின் சாதனை: 


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்துள்ளார். அதில்,  சர்வதேச டி 20 அரங்கில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் யுவராஜ் சிங். இவர் 12 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இது தவிர, டி20 சர்வதேசப் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் தனது பெயரில் படைத்துள்ளார். கடந்த 2007 டி20 உலகக் கோப்பையின் போது, ​​இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்தார். இது தவிர, ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்தாவது இடத்தில் பேட்டிங்கில் களமிறங்கி அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையும் இவரது பெயரில் உள்ளது. 5வது இடத்தில் பேட்டிங் செய்த இவர் ஏழு சதங்களை அடித்துள்ளார். இது தவிர, ஏழு ஐசிசி அளவிலான போட்டிகளின் இறுதிப் போட்டியில் விளையாடிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் உள்ளது. 


புற்றுநோயை வென்ற நாயகன்:


2011 உலகக் கோப்பைக்கு பிறகு, யுவராஜ் சிங்கிற்கு மார்பில் புற்றுநோய் கட்டி இருந்தது தெரியவந்தது. இதற்காக சிகிச்சை எடுத்துகொண்ட யுவராஜ் சிங், மீண்டு வர கடுமையாக போராடினார். இந்தநிலையில், ஒவர் இனி இந்திய அணிக்கு திரும்ப முடியாது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், அடித்து ஓரங்கட்டிய யுவராஜ் சிங் புற்றுநோயில் இருந்து மீண்டு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். 


யுவராஜ் சிங்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை: 


யுவராஜ் சிங் இந்திய அணிக்காக இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் 11 அரை சதங்கள் உள்பட 1900 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஒருநாள் போட்டியில் யுவராஜின் பேட் சிறப்பாகவே செயல்பட்டது. அவர் இந்தியாவுக்காக 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 சதங்களும், 52 அரை சதங்களும் உள்பட 8701 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 150 ரன்கள். இது மட்டுமின்றி, யுவி 58 டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக 1177 ரன்கள் எடுத்தார். T20 சர்வதேச போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 77 ரன்கள். 


இடது கை சுழற்பந்து வீச்சாளர் யுவராஜ் டெஸ்டில் 9 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 111 விக்கெட்டுகளையும், டி20 சர்வதேச போட்டியில் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். யுவராஜின் ஐபிஎல் வாழ்க்கையையில், 132 போட்டிகளில் பேட்டிங் மூலம் 2750 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 13 அரை சதங்கள் அடங்கும். அதே நேரத்தில் யுவராஜ் சிங் பந்துவீச்சிலும் இரண்டு ஹாட்ரிக் சாதனைகளை படைத்துள்ளார்.