90 ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத கிரிக்கெட் வீரர்களில் கார்ல் ஹூப்பர் இன்றும் தனித்துவமாக இருப்பார். அன்றைய காலக்கட்டத்தில் காலை விடிந்ததும் இந்திய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி எவ்வளவு ரன்கள் எடுத்திருக்கும் என்று எதிர்பார்த்து டிவியை ஆன் செய்தால், ஒரு பக்கம் விக்கெட்கள் தொடர்ந்து சரிந்தாலும், மறுபக்கம் மலை போல் நிற்பார் கார்ல் ஹூப்பர்.
அட யாருப்பா இவர்! எப்ப பாரு இந்தியாவுக்கு எதிரா மாங்கு மாங்குனு மனிசன் அடிச்சுக்கிட்டே இருக்காருனு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கதறுவாங்க. அப்படிப்பட்ட இந்தியாவுக்கும், இவருக்கும் ஏகப்பட்ட தொடர்பு இருக்கு. அப்படி என்னனு கேட்டிங்கனா அதையும் சொல்ல தயார்..
கார்ல் ஹூப்பரின் முதல் டெஸ்ட் போட்டியும் கொல்கத்தா மைதானத்தில் இந்தியாவிற்கு எதிராக தான். கடைசி டெஸ்ட் போட்டியும் இதே கொல்கத்தா மைதானம் இந்தியாவிற்கு எதிராக தான். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு எதிராக ஒரு கட்டத்தில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தபோதும், 4 மற்றும் 5 வது இடத்தில் ஆல்-ரவுண்டராக களமிறங்கும் ஹூப்பர் தனி ஒருவராக போராடி 240 ரன்கள் வரை கொண்டு செல்வார். இந்தியாவிற்கு எதிராக இவரது ஆவ்ரேஜ் மட்டுமே 49.43. ஒரு அணிக்கு எதிராக எந்தவொரு வீரரும் இவ்வளவு ஆவ்ரேஜ் வைப்பது சாதாரண விஷயமில்லை.
90 காலக்கட்டத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு அதிகப்படியான மனஅழுத்தம் இருக்கும். அதை முதலில் வெளிப்படையாக சொல்லி ஓய்வு கேட்டது கார்ல் ஹூப்பர் மட்டும் தான். அப்போழுது அவருக்கு வயது 33. இதற்கு முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இருந்தாலும், தனக்கு ஓய்வு உறுதியாக வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இவர் ஓய்வில் இருந்த அந்த 2 வருடத்தில் அணி நிர்வாகம் முதல் அவருடன் விளையாடிய வீரர்கள் வரை யாரும் நலம் விசாரிக்கவில்லை. ஒருவரை தவிர, அவர் தான் பிரைன் லாரா. நீ எப்போது ரீ- என்ட்ரி கொடுப்ப என்று தொடர்ந்து கார்ல் ஹூப்பரை கால் செய்து தொந்தரவு செய்தார்.
1999 ல் ஓய்வு பெற்ற ஹூப்பர், மீண்டும் 2001 ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அடியெடுத்து வைத்தார். ரீ- என்ட்ரி கொடுத்து அவர் விளையாடிய அடுத்த 22 டெஸ்ட் போட்டிகளில் 1609 ரன்கள் அடித்தும், 21 விக்கெட்களையும் கைப்பற்றினார். 329 சர்வதேச போட்டிகளில் கார்ல் ஹூப்பர் 11,523 ரன்கள் அடித்தும், 307 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
உலகளவில் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை சிறந்த ஆல்- ரவுண்டர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது தென் ஆப்பிரிக்கா அணியின் ஜாம்பவான் ஜாக் காலிஸ் தான். ஆனால் இவருக்கு முன்னோடியாக இருந்தவர் ஹூப்பர் தான். முதன்முதலில் டெஸ்ட், ஒருநாள் என இரண்டிலும் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி, 5000 ரன்களுக்கு மேல், 100 விக்கெட்,100 கேட்ச் என அனைத்திலும் இவரே முதலிடம். இவருக்கு அடுத்த இடத்தில் தான் ஜாக் காலிஸ்.
ஆப் ஸ்பின்னராக இருந்த போதிலும் யார்கர்களை அள்ளி வீசுவதிலும், இவர் வீசுவது சுழற்பந்தா? அல்லது வேகப்பந்தா ? என்று எதிரணி பேட்ஸ்மேன்கள் திக்கி திணறுவார்கள். பீல்டிங்கிலும் பின்னி எடுக்கும் இவர், துல்லியமான ரன் அவுட் செய்து ஸ்டெம்புகளை பறக்கவிடுவார்.
உலக அளவில் எந்த கிரிக்கெட் வீரரை இமிடேட் செய்வீர்கள் என்ற கேள்விக்கு பல உலக வீரர்களின் பதில் கார்ல் ஹூப்பர் தான்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்