ஒருநாள் போட்டியில் 200 அடித்த முதல் நபர் யார் தெரியுமா..? என்ற கேள்விக்கு உங்களின் பதில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் தெண்டுல்கர் என்றால் அது முற்றிலும் தவறு. ஆடவர் ஒருநாள் போட்டியில் வேண்டுமென்றால் அவர் முதல் நபராக இருக்கலாம். சச்சின் கடந்த 2010 ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் எடுத்தார்.ஆனால், இந்த சாதனையை கடந்த 1997 ம் ஆண்டே ஒரு பெண்மணி நிகழ்த்தி உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பினார் ஆஸ்திரேலியா வீராங்கனை பெலிண்டா கிளார்க்.
டிசம்பர் 16, 1997 அன்று, சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் உலக சாதனை வரிசையில் எவருக்கும் பதிக்கமுடியாத சாதனையை முதல் ஆளாக பதித்து தடம் பதித்தார். டென்மார்க்கிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 155 பந்துகளில் 229 ரன்கள் அடித்து உலக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவரது இன்னிங்ஸில் 22 பவுண்டரிகள் அடங்கும். அன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய பெலிண்டா கிளார்க் 229 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.
413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டென்மார்க் அணி, 25.5 ஓவர்களில் வெறும் 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலக வரலாற்றில் முதல் இரட்டை சதம் அடித்த பெலிண்டா கிளார்க்கு ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
24 ஆண்டுகளுக்குப் பிறகும், மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் பெலிண்டா கிளார்க் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது. 2014 ல் ரோஹித் ஷர்மாவின் 264 ரன்கள் ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று வரை அதிகபட்ச ஸ்கோராக இருந்து வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்