சச்சின் டெண்டுல்கர் தனது 51வது பிறந்தநாளை இன்று அதாவது ஏப்ரல் 24, 2024 (புதன்கிழமை) கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்ததே அவரது மிகவும் பிரபலமான சாதனையாகும். இதை தொடர்ந்து, 100 சர்வதேச சதங்களைத் தவிர, சச்சின் டெண்டுல்கரின் 10 சிறந்த சாதனைகளை இங்கே பார்க்கலாம். 

1- அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடிய முதல் வீரர்

 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்தான்.  அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி பெரும்பாலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அவ்வளவாக விளையாடுவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், ஒரு வீரர் 100 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினாலே அது மிகப்பெரிய சாதனையாகவும், பெருமையாகவும் கருதப்படும். இத்தகைய சூழ்நிலையில், சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இருப்பினும், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஆண்டர்சன் முறியடிக்க முடியுமா இல்லையா என்பது தெரியவில்லை. காலம்தான் பதில் சொல்லும்.  

2- அதிக சர்வதேச ரன்கள்:

சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 34,357 ரன்கள் எடுத்தார். கிரிக்கெட் வரலாற்றில் அதிக சர்வதேச ரன்களை எடுத்தவர் இவர் மட்டும்தான். சச்சினின் இந்த சாதனையை முறியடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. தற்போது, ​​சர்வதேச அளவில் 25,000 ரன்களை கடந்த ஒரே பேட்ஸ்மேன் விராட் கோலி மட்டுமே. 

3- சர்வதேச வாழ்க்கையில் அதிக போட்டிகள் 

சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அதிக போட்டிகளில் விளையாடிய பேட்ஸ்மேன் ஆவார். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 664 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக தற்போது, ​​500 சர்வதேசப் போட்டிகளைக் கடந்து விளையாடி வரும் ஒரே பேட்ஸ்மேன் விராட் கோலி. 

4- அதிக பவுண்டரிகள்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்த பேட்ஸ்மேன் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரே முதலிடம். சச்சின் டெண்டுல்கர் இதுவரை 664 போட்டிகளில் 782 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 4076+ பவுண்டரிகளை அடித்தார். இந்த பட்டியலில் குமார் சங்கக்கரா சர்வதேச வாழ்க்கையில் 3015 பவுண்டரிகளை அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 

5- சர்வதேச கிரிக்கெட்டில் அதிக 50 பிளஸ் ரன்கள்: (சதங்கள் உள்பட)

சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை பலமுறை அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 100 சதங்கள் மற்றும் 164 அரை சதங்கள் உட்பட 264 முறை 50 ரன்களை கடந்துள்ளார். 

6- ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஆண்டுகள் விளையாடிய வீரர்: 

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக நாள் விளையாடிய ஒரே வீரர் ஆவார். இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 22 ஆண்டுகள் 81 நாட்கள் விளையாடியுள்ளார்.

7- ஒரே ஆண்டில் அதிகபட்ச ஒருநாள் ரன்கள்: 

கடந்த 1998ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 1894 ரன்கள் அடித்திருந்தார். இது தற்போது வரை ஒரே ஆண்டில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்னாக உள்ளது. 

8- ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள்:

சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டும் 20 சதங்கள் அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிக சதங்கள் இதுவாகும். 

9- அதிவேக ஒருநாள், டெஸ்ட் ரன்கள்: 

சச்சின் டெண்டுல்கர் தனது பெயரில் டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 15,000 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் அதிவேக 18,000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை படைத்தார். 

10- அதிக மேன் ஆஃப் தி மேட்ச் விருது: 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து சர்வதேச போட்டிகளையும் சேர்த்து அதிக மேன் ஆஃப் தி மேட்ச் விருது வாங்கியவர் சச்சின் டெண்டுல்கர். இவர் இதை தனது வாழ்நாளில் 76 முறை பெற்றுள்ளார். 66 மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெற்று விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார்.