உலக கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் வீரர்களில் ஒருவரான கேன் வில்லியம்சன் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கடந்த 2010 ம் ஆண்டில் அறிமுகமான இவர், தற்போது வரை நியூசிலாந்து அணிக்காக பல்வேறு சாதனைகளை குவித்து வருகிறார். 


மேலும், ’ஃபேப் ஃபோர்’ வரிசையில் தொடர்ந்து தனது பெயரையும் தக்க வைத்து கொண்டார். ஃபேப் ஃபோரில் தற்போது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோர் உள்ளனர். 


டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள்: 


டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார். இதுவரை இவர் 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 54. 89 சராசரியில் 8, 124 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தமாக 164 இன்னிங்ஸ்களில் 28 சதங்கள் மற்றும் 33 அரைசதங்கள் அடித்துள்ளார். டெஸ்டில் இவரது சிறந்த ஸ்கோர் 251 ஆகும். 


டெஸ்ட் கேப்டனாக சாதனைகள்:


2019 - 21 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, இந்திய அணியை வீழ்த்தி கோப்பை வென்றது. இந்த 2019 - 21 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இவர், 16 இன்னிங்ஸ்கள் விளையாடி 3 சதங்கள் மற்றும் இரண்டு சதங்களுடன் 918 ரன்கள் எடுத்திருந்தார். 


ஒருநாள் போட்டிகளில் சாதனை: 


வில்லியம்சன் இதுவரை 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 47.83 சராசரியின் 6,554 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் இவரது சிறந்த ஸ்கோர் 148 ரன்கள் ஆகும். ஒட்டுமொத்தமாக 13 சதங்கள் மற்றும் 42 அரை சதங்களை அடித்துள்ளார். மேலும், நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். ராஸ் டெய்லர் 236 போட்டிகளில் 8, 607 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 


கடந்த 2015 மற்றும் 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இவரது தலைமையிலான நியூசிலாந்து அணி இறுதிப்போட்டியில் தோல்வியுற்று இரண்டாம் இடத்தை பிடித்தது.


டி20 போட்டி சாதனை: 


வில்லியம்சன் இதுவரை 87 டி20 போட்டிகளில் விளையாடி 17 அரைசதங்களுடன் 2, 464 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சிறந்த ஸ்கோர் 95 ரன்கள். நியூசிலாந்து அணிக்காக டி20யில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் வில்லியம்சன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் மார்ட்டின் கப்டில் 122 போட்டிகளில் விளையாடி 3, 531 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 


ஒட்டுமொத்த சாதனை:


கேன் வில்லியம்சன் இதுவரை 342 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக களமிறங்கி 17, 142 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 41 சதங்கள் மற்றும் 92 அரைசதங்களும் அடங்கும். சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ராஸ் டெய்லர் 450 போட்டிகளி விளையாடி 18, 199 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 


ஐபிஎல் : 


இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தலைமை தாங்கி 2016ல் கோப்பை வென்று கொடுத்தார் கேன் வில்லியம்சன். 


தொடர்ந்து, ஐபிஎல் 2018ம் ஆண்டு அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். அந்த தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 8 அரைசதங்கள் உள்பட 735 ரன்கள் எடுத்தார்.