இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் இஷாந்த் சர்மா. இவர் இன்று தன்னுடைய 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பிசிசிஐ, முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை செய்துள்ளார்.
அதில், “இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் உயரமான வேகமான வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவிற்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள்.. மீண்டும் இந்திய அணிக்கு நீங்கள் திரும்புவதை காண ஆவலுடன் இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் இந்த பதிவுடன் அவர் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் யுவராஜ் சிங் மற்றும் இஷாந்த் சர்மா சேர்ந்து இருப்பது போல் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இஷாந்த் சர்மா நடனமாடும் வகையில் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியில் இஷாந்த் சர்மா 2007ஆம் ஆண்டு முதல் களமிறங்கி வருகிறார். இவர் குறிப்பாக 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் ரிக்கி பாண்டிங்கை தன்னுடைய பந்துவீச்சின் மூலம் திணறடித்தார். இவர் இந்திய அணிக்காக 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 80 ஒருநாள் போட்டிகளில் 115 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மேலும் 14 டி20 போட்டிகளில் 8 விக்கெட் எடுத்துள்ளார்.
இவை தவிர சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கும் 6 அணிகளுக்கு எதிரான ஒரே இன்னிங்ஸ் 5 விக்கெட் எடுத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை இவர் தன்வசம் வைத்துள்ளார். இஷாந்த் சர்மா 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன்பின்னர் 2022ஆம் ஆண்டு தற்போது வரை இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கவில்லை. இந்திய அணியில் இவர் கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளிலும் மட்டும் களமிறங்கி வந்தார். தற்போது டெஸ்ட் அணியிலும் இவர் இடம்பெறவில்லை. இதனால் இவர் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.