பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரகமாக வலம் வந்தவர்களில் ஒருவர் கிஷோர் குமார். நடிகர் மற்றும் பாடகராக வலம் வந்து பலரின் மனதை கவர்ந்தவர். இவருடைய இலத்தை விராட் கோலி வாடகைக்கு எடுத்திருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வந்தன. 


இந்நிலையில் நடிகர் கிஷோர் குமாரின் மகன் அமித் குமார் அந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி, “மறைந்த பாலிவுட் நடிகர் கிஷோர் குமாரின் பங்களாவில் விராட் கோலி ஒரு ஹோட்டலை தொடங்க உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்த தகவல் கிட்டத்அதட்ட உறுதியாகியுள்ளது. 


 






இன்னும் விராட் கோலி தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும் நடிகர் கிஷோர் குமாரின் மகன் இதை உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கெனவே பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்த பிறகு டெல்லியில் நியூவா என்ற ஹோட்டலை தொடங்கினார். இந்த ஹோட்டல் டெல்லியின் ஆர்.கே.புரத்தில் அமைந்துள்ளது. இவை தவிர சமீபத்தில் ஒன் 8 கம்யூன் என்ற இரண்டு ஹோட்டல்களை டெல்லி மற்றும் கொல்கத்தாவில் விராட் கோலி தொடங்கியிருந்தார்.


 


ஓட்டல் நடத்தும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்:


ஏற்கெனவே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நட்சத்திர ஓட்டல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு அடுத்து விராட் கோலியும் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நட்சத்திர ஓட்டல் தொழிலில் கால்பதித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஹாங்காங் அணி செய்த கௌரவம்:


ஹாங்காங் அணி சார்பில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி அவருக்கு ஹாங்காங் அணி சார்பில் ஒரு ஜெர்ஸி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அந்த ஜெர்ஸியில் சில வரிகளும் இடம்பெற்றுள்ளன. 


அதில், “விராட் கோலி நீங்கள் பல தலைமுறை வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பதற்கு எங்களுடைய நன்றி. நாங்கள் எப்போதும் உங்களுடன் துணை நிற்போம். அடுத்து நிறையே நல்ல நாட்கள் உங்கள் கிரிக்கெட் பயணத்தில் இடம்பெற உள்ளது. அன்பும் ஆதரவுடனும் ஹாங்காங் அணி” என்று எழுதப்பட்டுள்ளது.



இதை விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளார். அத்துடன் இது என்னை மிகவும் நெகிழ வைத்துள்ளது. இது ஒரு இனிமையான பரிசு என்றும் கூறியிருந்தார். அத்துடன் ஹாங்காங் அணிக்கு தன்னுடைய நன்றியையும் விராட் கோலி தெரிவித்திருந்தார்.  ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக விராட் கோலியின் ஃபார்ம் தொடர்பான கருத்துகள் அதிகம் எழுந்து வந்தன. அந்தப் பேச்சுகளுக்கு விராட் கோலி தன்னுடைய ஆட்டத்தின் மூலம் தற்போது பதிலளித்து வருகிறார். பாகிஸ்தான் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஹாங்காங் போட்டியில் அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் அவர் மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.