மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டன. நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடிபெற்ற போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 
களமிறங்கும் போது தங்கள் அணிக்கு மிகவும் மோசமான மாலையாக இன்று இருக்கும் என அவர்கள் கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்கள்.


போட்டியின் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் மேக்னாவை க்ளீன் போல்ட் ஆக்கிய கேப் தான் வீசிய நான்கு ஓவரிலும் விக்கெட்டுகளை எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய கேப் குஜராத் அணியின் பேட்டிங் வரிசையை தனது அசகாய பந்து வீச்சால் நொறுக்கித் தள்ளினார். பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது. 


குஜராத் அணி தரப்பில் நிலையான பார்ட்னர்ஷிப் யாராலும் அமைக்க முடியாததால் அந்த அணி தொடர்ந்து தடுமாறி வந்தது. 16 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்து இருந்தது. இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில், விக்கெடுகளை இழந்து ரன்கள் சேர்த்தது. 


அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி குஜராத் அணியின் பந்து வீச்சினை மைதானம் முழ்ழுவதும் பவுண்டரிகளாக பறக்கவிட்டு, விக்கெட் இழப்பின்றி, 7.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. டெல்லி அணியின் ஷெஃபாலி வர்மா 28 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். அதில் 10 பவுண்டரிகள் 5 சிக்ஸர் என மைதானம் முழுவதும் குஜராத் வீராங்கனைகளை ஓடவிட்டுக் கொண்டு இருந்தார். அதிரடியாக ஆடிவந்த ஷெஃபாலி வர்மாவுக்கு  மெக் லேனிங் சிரமமில்லாமல் ஸ்டைரைக்கை ரொட்டேட் செய்து வந்தார். அவரும் 15 பந்துகளை எதிர் கொண்டு 21 ரன்கள் சேர்த்து இருந்தார். 


இந்த போட்டியில் ப்ளேயர் ஆஃப்த பேட்ச் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய மாரிசான் கேப்-க்கு வழங்கப்பட்டது. 4 ஓவர்கள் வீசிய மாரிசான் கேப் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


33 வயதான கேப் தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சு வீராங்கனை ஆவார். தற்போது டெல்லி அணிக்காக ஆடி வரும் இவர் பெர்த் ஸ்கார்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளார். பந்துவீச்சு வீராங்கனையாக மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசகாய சூராங்கனை கேப். இவர் இதுவரை 129 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம், 11 அரைசதங்கள் உள்பட 2367 ரன்களை குவித்துள்ளார். 94 டி20 போட்டிகளில் ஆடி 2 அரைசதங்கள் உள்பட 1178 ரன்களை எடுத்துள்ளார்.


ஒருநாள் போட்டியில் இதுவரை 147 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 76 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த தொடர் தொடங்கியது முதலே அதிகளவில் டாட் பந்துகளை வீசிய வீராங்கனைகள் பட்டியலில்  55 டாட் பந்துகளுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.