சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவவராக இருக்கும் கிரேக் பார்க்லே, மீண்டும் அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட்டின் பிரதான அமைப்பான ஐசிசியின் தலைவர் பதவிக்கு தேர்வு நடைமுறை சமீபத்தில் நடந்தது. தற்போது, தலைவராக இருக்கும் கிரேக் பார்க்லே நீடிப்பாரா அல்லது அவரை எதிர்த்து யாரும் போட்டியிடுவார்களா என எதிர்பார்ப்பு எழுந்தது.
ஐ.சி.சி. தலைவர்
ஐசிசி தலைவர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வந்த சமயத்தில் பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து சவுரவ் கங்குலி விலகினார். இதனால், அவர் ஐசிசி தலைவராக வாய்ப்பிருப்பதாகவும், அதற்கு பிசிசிஐ பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் கங்குலி ஐசிசி பொறுப்புக்கு ஏதும் விண்ணப்பிக்கவில்லை.
ஜிம்பாப்வேயின் தாவெங்வா முகுலானி, ஐசிசி தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவரும் தனது வேட்பு மனுவை பின்னர் வாபஸ் பெற்றார். இதையடுத்து, போட்டியின்றி இரண்டாவது முறையாக கிரேக் பார்க்லே தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐசிசியின் தலைவராக அவரே நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.
யார் இந்த பார்க்லே?
வழக்கறிஞரான கிரேக் பார்க்லே, நியூசிலாந்தைச் சேர்ந்தவர். இவர் 2020ஆம் ஆண்டு நவம்பரில் ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பாக, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தார்.
தற்போது மீண்டும் தலைவராக தேர்வானது குறித்து அவர் கூறுகையில்,"ஐசிசியின் தலைவராக மீண்டும் தேர்வாகியிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. சக ஐசிசி இயக்குநர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில், கிரிக்கெட்டின் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்" என்றார்.
இதனிடையே, உலகக் கோப்பை டி20 தொடரில் நாளைய ஆட்டத்தில் பாகிஸ்தானும், இங்கிலாந்தும் மோதுகின்றன. எட்டாவது டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவும், நியூசிலாந்து தோல்வி அடைந்து வெளியேறின. இதையடுத்து, பாகிஸ்தானும், இங்கிலாந்தும் பைனலுக்கு முன்னேறியுள்ளன.
உலககோப்பை :
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதும் இந்த ஆட்டம் மெல்போர்ன் நகரில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஏறக்குறைய 1 லட்சம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் அரங்கேறும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
20 ஓவர் உலக கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத இருப்பது இது 3-வது முறையாகும். இதற்கு முன் 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் லீக் சுற்றில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. அதே நேரம் அந்த ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் தான் வென்றது. அடுத்து 2010-ல் வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை தொடரின் போது இவ்விரு அணிகளும் 'சூப்பர் 8' சுற்றில் சந்தித்தன. இதில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. மேலும் அந்த ஆண்டு உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது.