நடப்பு டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் அடிலெய்டு மைதானத்தில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்து இந்தியா தொடரில் இருந்து வெளியேறியது. இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி இந்திய கிரிக்கெட் அணியின் டி20 அணி மற்றும் கேப்டன்சி குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
டி20 அணியில் என்னென்ன மாற்றங்கள் வரும்
இந்தியாவில் உள்ள ரசிகர்களும், வீரர்களும் ஏமாற்றமடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) உள்ள விஷயத்தை நன்கு அறிந்த ஒருவர், டி20 அணியில் இருந்து பல மூத்த வீரர்கள் நீக்கப்படலாம் என்று கூறியுள்ளார். பெரும்பாலும் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் கடைசி டி20 போட்டியை விளையாடியது போல் தெரிகிறது.
தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக இந்த உலகக்கோப்பையை மட்டுமே மனதில் வைத்து அழைத்து செல்லப்பட்டார். இனிமேல் அவருக்கு அங்கு வேலை இருக்காது. அஸ்வினைப் பொறுத்தவரை, எந்த போட்டியிலும் எதிரணியினரை அச்சுறுத்தவில்லை. ஆறு ஆட்டங்களில் அவர் பெற்ற ஆறு விக்கெட்டுகளில் மூன்று ஜிம்பாப்வே போட்டியில் கிடைத்தது. 8.15 என்ற எகானமி ரேட் சிறப்பானதும் இல்லை என்பதால் இனிமேல் அவர் தொடர வாய்ப்பும் இல்லை.
விராட் கோலி, ரோகித் ஷர்மாவை பொறுத்தவரை, டி20 போட்டிகளில் தங்கள் எதிர்காலத்தை குறித்து அவர்களே முடிவு செய்துகொள்ள பிசிசிஐ விட்டுவிடும் என்று தெரிகிறது. "பிசிசிஐ ஒருபோதும் யாரையும் ஓய்வு பெறச் சொல்லாது. ஓய்வு என்பது தனிப்பட்ட முடிவு. ஆனால் 2023-ல் ஒரு சில டி20 போட்டிகள் திட்டமிடப்பட்டிருப்பதால், பெரும்பாலான மூத்த வீரர்கள் அந்தச் சுழற்சியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள்" என்று பெயர் கூறாத பிசிசிஐ நபர் ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
ஹர்திக் பாண்டியா
"நீங்கள் விரும்பவில்லை என்றால் நீங்கள் ஓய்வை அறிவிக்கத் தேவையில்லை, ஆனால் அடுத்த ஆண்டு டி20 போட்டிகளில் பெரும்பாலான மூத்த வீரர்களை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்" என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது. அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருந்தாலும், அணியில் ஒரு பெரிய மாற்றம் நடந்து வருகிறது என்று தகவல் தெரிவிக்கிறார். ஹர்திக் பாண்டியா நீண்ட கால கேப்டனாக தேர்வு செய்யப்படுவதாகவும், அவர் தலைமையில் ஒரு புதிய அணி உருவாக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.
ஒருநாள் போட்டியில் கவனம்
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியும் அடுத்த ஒரு வருடத்திற்கு ஒருநாள் போட்டி வடிவத்தில் கவனம் செலுத்த விரும்புகிறது. அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா குறைந்தது 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதால் டி20 போட்டிகள் அவ்வளவு முக்கியத்துவம் பெறாது. இந்தியாவின் போட்டிகள் அடங்கிய காலண்டரைப் பார்த்தால், 50 ஓவர் உலகக் கோப்பை வரை, அடுத்த வாரம் நியூசிலாந்தில் நடைபெறும் மூன்று ஆட்டங்களில் தொடங்கி வெறும் 12 டி20 போட்டிகள் மட்டுமே விளையாடும் என்பதைக் காட்டுகிறது.
இளம் வீரர்கள் யார்? யார்?
ஷுப்மான் கில் அணியில் சேர்க்கப்பட்டு ஓப்பனிங் இறங்கக்கூடும். அவரிடம் துணை கேப்டன் ரிஷப் பந்த் ஓப்பனிங் இறங்குவதாகவும் ஒரு யோசனை வைத்திருக்கிறது தேர்வுக்குழு. இந்திய அணியின் பவர்பிளே ரன் சேர்ப்பு மெதுவாக இருப்பதாக கருதும் இவ்வேளையில், ரிஷப் பந்தின் ஓப்பனிங் பவர்ப்ளே இலக்கணத்தை மாற்றக்கூடும். டிராவிட் தொடர்ந்து புறக்கணித்து வரும் ப்ரித்வி ஷாவுக்கும் வாய்ப்பு வரலாம். ரோஹித்துக்கு இப்போது 35 வயதாகிறது, மேலும் இரண்டு ஆண்டுகளில் நடக்க இருக்கும் உலகக்கோப்பையில் 37 வயதில், அவர் டி20 அணியை வழிநடத்த வாய்ப்பில்லை.
வாஷிங்டன் சுந்தர், காயத்தால் இடம்பெறாமல் இருந்தார், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். கே.எல். ராகுல் பெரும்பாலும் டிராப் செய்யப்படலாம். அவரது ஸ்ட்ரைக்-ரேட் 120.75 என்பது இந்திய அணியையே பாதிக்கிறது. இரண்டு மெய்டன் ஓவர்கள் விளையாடிய பெரிய அணிகளில் ஒரே தொடக்க ஆட்டக்காரர் இவரே. மேலும் பெரிய ஆட்டங்களில் எந்த ஒரு பெரிய அணிக்கும் (4 vs பாகிஸ்தான், 9 vs SA, 9 vs இங்கிலாந்து) எதிராக இரட்டை இலக்கங்களைப் தொடவில்லை. நிறைய விமர்சனங்கள் இருந்தபோதிலும் ராகுல் தனது ஆட்டத்தை மாற்றத் தவறிவிட்டார். எனவே பெரும்பாலும் அவர் இடம் கேள்விக்குறியே?