கடந்த 2021 ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்று டி20 உலகக் கோப்பை ஆசிய இரண்டு முக்கிய தொடர்களிலும் இந்தியா தோல்வியடைந்த பிறகு, 2022 ம் ஆண்டு ஒரு புதிய தலைமை தொடக்கத்தின் நம்பிக்கையின் கீழ் தொடங்கியது.


விராட் கோலியிடம் இருந்து ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற போது, ராகுல் டிராவிட் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ரோகித் - டிராவிட் கூட்டணி இந்திய அணியை நல்ல உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. 


2022 முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடும், கேப்டன் ரோகித் சர்மாவின் கேப்டன்சியும் சிறப்பாக இல்லை என்றே கூறலாம். இந்தநிலையில், கேப்டனாகவோ அல்லது பேட்ஸ்மேனாகவோ ஹிட்மேனுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமையவில்லை.. இதுகுறித்து ஒரு சிறிய பார்வை:


 2022ம் ஆண்டு ’ஹிட்மேன்’ ரோகித் சர்மா:


இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா 2021 ம் ஆண்டு இறுதியில் ஒருநாள் மற்றும் டி20 ஓவர்கள் கிரிக்கெட்டுக்கு முழுநேர இந்திய அணியில் கேப்டனாக பொறுப்பேற்றார். 2022 ம் ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த இந்திய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார், மேலும் ரோஹித் சர்மா மூன்று வடிவங்களிலும் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டனாகவோ அல்லது பேட்ஸ்மேனாகவோ ஹிட்மேனுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமையவில்லை. 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஒரு வருடத்தில் சதம் அடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கூட அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக, அவரால் வெளிநாட்டில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியவில்லை.


ரோகித் சர்மாவின் பேட்டிங் செயல்திறன் :


2022 ம் ஆண்டியில் ரோகித் சர்மா ஒட்டுமொத்தமாக 39 சர்வதேச போட்டிகளில் விளையாடி 6 அரைசதங்கள் உள்பட 995 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டு ரோகித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 76 ரன்கள் மட்டுமே. அதுவும், கடந்த ஜுலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பதிவானது. அதிகபட்சமாக இந்தாண்டு 4 முறை டக் அவுட்டாகி உள்ளார். 


கடந்த 2021ம் ஆண்டு ரோகித் சர்மா வெறும் 25 போட்டிகளில் மட்டுமே விளையாடி 2 சதங்கள், 9 அரை சதங்களுடன் 1420 ரன்கள் எடுத்திருந்தார். 


7 டெஸ்டில் 2 ல் மட்டுமே விளையாடிய ரோகித் சர்மா:


2022 ஆம் ஆண்டில், இந்திய அணி மொத்தம் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் 2ல் மட்டுமே ரோகித் சர்மாவால் விளையாட முடிந்தது. இந்திய அணி வெளிநாடுகளில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒன்றில் கூட ரோஹித் சர்மாவால் விளையாட முடியவில்லை. ஜனவரி மாதம் இந்திய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. காயம் காரணமாக ஹிட்மேன் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை. இதற்குப் பிறகு அவர் இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டித் தொடரில்  விளையாடினார். கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை. அதேபோல், காயம் காரணமாக பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகினார்.


ஒருநாள் மற்றும் டி20யில் ரோகித் சர்மா பங்கு:


ரோகித் சர்மா 2022ம் ஆண்டு 8 ஒருநாள் போட்டிகளில் 3 அரைசதம் உள்பட 249 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 29 டி20 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 656 ரன்கள் எடுத்துள்ளார்.  


கேப்டனாக ரோகித் சர்மா:


ஐபிஎல் தொடரோ அல்லது சர்வதேச கிரிக்கெட்டோ இந்தாண்டு ரோகித் சர்மாவிற்கு கேப்டனாக மோசமாக அமைந்தது. 


ஐந்து முறை பட்டம்பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இந்தாண்டு 14 போட்டிகளில் வெறும் நான்கில் மட்டுமே வெற்றிபெற்று தொடரில் கடைசி இடத்தை பெற்றது. அதேபோல், ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேனாக 2022 முழு சீசனிலும் முதல்முறையாக ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


அதேபோல், ரோகித் சர்மா தலைமையின்கீழ் இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரில் வெளியேறியது. இதையடுத்து, அடுத்த ஆண்டு ரோகித் சர்மா தலைமையில் ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஒரு சதம் கூட இல்லை:


2012ம் ஆண்டுக்கு பிறகு ரோகித் சர்மா ஒரு சதம் கூட அடிக்க தவறிய ஆண்டாக 2022 அமைந்தது.