இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் யார் என்பதை தற்காலிக இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா உறுதிப்படுத்தியுள்ளார். 


யார் ஓப்பனிங்?


இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 22 தேதி வரை நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் மோத உள்ளன. முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷான் இந்திய அணிக்காக ஓபன் செய்வார்கள் என்பதை ஹர்திக் பாண்டியா உறுதிப்படுத்தியுள்ளார். சொந்த காரணங்களால் வெளியேறிய வழக்கமான கேப்டன் ரோஹித் ஷர்மா இல்லாத நிலையில் ஹர்திக் முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



கில் - கிஷன்


நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கில் ஒரு அற்புதமான ஆட்டத்தை ஆடி, இரட்டை சதம் விளாசியதோடு, மற்றொரு போட்டியில் சதத்தையும் அடித்தார். மறுபுறம், மற்றொரு இளம் வீரர் இஷான் கிஷன் முன்பு இரட்டை சதம் அடித்த நிலையில், இந்த தொடரில் சுமாராகவே ஆடினார். இருப்பினும், 2023 ODI உலகக் கோப்பை நெருங்கி வருவதைக் கருத்தில் கொண்டு, இருவரும் முக்கியமான ரன்களைப் பெறுவதற்கும், அணியில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்துவதற்கும் ஆர்வமாக இருப்பார்கள்.


தொடர்புடைய செய்திகள்: PM Modi Factcheck : பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? நோபல் பரிசு பரிந்துரை குழுவின் துணைத் தலைவர் பேசியது இதுதான்..!


கே.எல்.ராகுல் இடம்பெறுவாரா?


சுத்தமாக ஃபார்மில் இல்லாத கே.எல்.ராகுலுக்கு இந்த போட்டியில் இடம் கிடைக்குமா, என்று கேள்விகள் எழுந்த நிலையில், இஷான் கிஷன் இருப்பதால் வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது. இந்த போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. மேலும், சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வென்றதைத் தொடர்ந்து, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 சுழற்சியின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தனது இடத்தை உறுதிப்படுத்தியது. இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்ல, இலங்கையை கடைசி பந்தில் வீழ்த்தி த்ரில்லர் வெற்றியை பெற்ற நியூசிலாந்து அணி உதவியது.



WTC இறுதிப் போட்டியில் ஹர்திக் இல்லை


இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இப்போது தி ஓவலில் இந்த இறுதிப்போட்டியில் மோத உள்ளன. போட்டி ஜூன் 7 முதல் தொடங்குகிறது. இதற்கிடையில், ஹர்திக் பாண்டியா WTC இறுதிப் போட்டியில் இருந்து தன்னைத் தானே விலக்கிக் கொண்டார். அதுகுறித்து பேசிய அவர், "இந்தியாவின் சிவப்பு பந்து வெற்றியில் எந்த பங்கும் எனக்கில்லை. நான் நெறிமுறை ரீதியாக மிகவும் வலிமையான நபர். நான் அங்கு சென்றடைய 10% கூட செய்யவில்லை. நான் 1% கூட இல்லை. எனவே நான் அங்கு வந்து ஒருவரின் இடத்தைப் பிடிப்பது நெறிமுறையாக இருக்காது. நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பினால், நான் எனது இடத்தைப் பெறுவேன். நான் பங்களித்துள்ளேன், சிறப்பாக செயல்படுகிறேன் என்று உணரும் வரை WTC இறுதிபோட்டி அல்லது எதிர்கால டெஸ்ட் தொடரில் நான் பங்கேற்க மாட்டேன், ”என்று பாண்டியா கூறினார்.