கடந்த டிசம்பரில் தீவிர விபத்துக்குள்ளான ரிஷப் பந்த் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தேறி வரும் நிலையில், அவரை இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் சந்தித்து, அதன்பின் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.


ரிஷப் பந்த் விபத்து


கடந்த வருடம் டிசம்பர் 30-ம் தேதி டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் அவரே ஓட்டிக்கொண்டு தனியாக பயணித்த போது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானார். ரூர்கி அருகே நடந்த இந்த விபத்தில், கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக மீட்டனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகவும், வலது முழங்காலில் தசைநார் கிழிந்ததாகவும், வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. முதுகில் சில சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.



வெற்றிடத்தை உணரும் இந்திய அணி


மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது, கிரிக்கெட் உலகையே உலுக்கியது. பல வீரர்கள் இந்த செய்தியை கேட்டு அதிர்ந்தனர். இன்றுவரை எல்லா போட்டிகளிலும் அவருக்கான இடம் நிரப்படாமல் உள்ளது. நிரப்ப முடியாமல் திணறி வருகிறது இந்திய அணி, குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில். இடையில் வந்து இறங்கி மளமளவென பவுண்டரிகளை, சிக்ஸர்களை விளாசும் அவரது டெஸ்ட் அதிரடியை எல்லோருமே மிஸ் செய்கிறோம்.


தொடர்புடைய செய்திகள்: PM Modi Factcheck : பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? நோபல் பரிசு பரிந்துரை குழுவின் துணைத் தலைவர் பேசியது இதுதான்..!


உடல்நல அப்டேட்டுகள்


சிகிச்சைகள் முடிந்து வீட்டுக்கு திரும்பிய அவர், தற்போது காயத்தில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறார். அவர் களம் திரும்ப ஓராண்டு காலம் ஆகும் என கூறப்படும் நிலையில் அவரின் வருகையை எதிர்பார்க்காத கிரிக்கெட் ரசிகர்களே இல்லை. அவரும் தன்னை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு அவரது உடல்நிலை அப்டேட்டை தெரிவிப்பார். இம்முறை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங் அந்த வேலையை செய்துள்ளார்.






யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராம் பதிவு


அவரை சென்று சந்தித்த அவர், அவரோடு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் யுவராஜ் சிங், "குழந்தை போல் நடக்க துவங்குகிறார் !!! இந்த சாம்பியன் விரைவில் மீண்டும் எழப் போகிறார். நல்ல சந்திப்பு, அவ்வளவு சிரித்தோம்… என்ன ஒரு மனிதர், எல்லா நேரத்திலுமே பாசிட்டிவாகவும், மகிழ்வுடனும் இருக்கிறார்! மேலும் ஆற்றலுடன் எழுந்து வாருங்கள்", என்று எழுதி இருந்தார். அந்த பதிவில் இருந்து புகைப்படத்தில் ரிஷப் பந்தின் முகம், கைகள் காயங்கள் இன்றி முன்பைப்போல் மாறிவிட்டன. காலை தூக்கி டேபிள் மேல் வைத்துள்ளார். அதில் மட்டும் கட்டு கட்டியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். நேற்றிரவு வெளிவிடப்பட்ட இந்த பதிவை இதுவரை மட்டுமே ஆறு லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பலர் யுவராஜ் சிங்கின் இந்த செயல்பாடு குறித்து புகழ்ந்து வருகின்றனர், பலர் ரிஷப் பந்த் விரைவில் அணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உடல் நிலை சரியாக வேண்டும் என்றும் விருப்பம் தெரிவிக்கின்றனர்.