கடந்த 1901ஆம் ஆண்டு முதல், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இது உலகின் பெருமை மிகு பரிசாக கருதப்படுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா?
அந்த வகையில், இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு பிரதமர் மோடிக்கு வழங்க இருப்பதாக சில செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டன.
ஆனால், அந்த தகவல் பொய் என தற்போது தெரிய வந்துள்ளது. பிரதமர் மோடி பற்றி நோபல் பரிசு பரிந்துரை குழுவின் துணைத் தலைவர் புகழ்ந்து பேசியதை வேறு விதமாக மாற்றி அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க அதிக வாய்ப்பிருப்பதுபோல அவர் பேசியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நோபல் பரிசு பரிந்துரை குழுவின் துணைத் தலைவர் விளக்கம்:
இந்தியா வந்துள்ள நோபல் பரிசு பரிந்துரை குழுவின் துணைத் தலைவர் அஸ்லே தோஜா, இதுகுறித்து விளக்கம் அளிக்கையில், "இது போலி செய்தி. அதற்கு முக்கியத்துவம் தந்து பொருட்படுத்த வேண்டாம். அதுபோன்ற எந்த தகவலையும் நான் சொல்லவில்லை. இதை திட்டவட்டமாக மறுக்கிறேன்" என்றார்.
பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு தருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அஸ்லே தோஜா தெரிவித்ததாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது. அதில், உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்த நிலைபாட்டின் காரணமாக பிரதமர் மோடியை புகழ்ந்த அஸ்லே தோஜா, "இந்தியா போன்ற சக்திவாய்ந்த நாட்டிலிருந்து அத்தகைய நிலைபாடு மிகவும் முக்கியமானது" என்றார்.
"உலகம் முழுவதும் அமைதி நிலவுவதை நான் கவனிக்கவில்லை. ஆனால், உக்ரைன் நெருக்கடியில் பிரதமர் மோடி நேர்மறையான முறையில் தலையிட்டு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக ரஷ்யாவை எச்சரித்ததை நான் கவனித்தேன். அதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் இந்த சமிக்ஞை கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா போன்ற சக்திவாய்ந்த நாட்டிலிருந்து இது வரும்போது இது மிகவும் முக்கியமானது.
கடந்த சில ஆண்டுகளாகவே மோடி பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த உலகின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். மேலும், இந்தியா ஒரு வளரும் நாடாக இருந்து உலகின் முதன்மைப் பொருளாதாரங்களில் ஒன்றாக மாறி இருப்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமானது. இது மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தியா பேசும் போது, அது நட்புக் குரலுடன் அச்சுறுத்தல்கள் இல்லாமலும் இருக்கும்" என அஸ்லே தோஜா தெரிவித்துள்ளார்.