வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதல் சீசனின் முதல் போட்டியில் மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அவர்கள் பந்துவீச்சைத் தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு என்பதை சேசிங்கின்போது உணர்ந்திருப்பார்கள்.
ஹர்மன்பிரீத் கவுர், மேத்யூஸ், அமெலியா கெர் ஆகியோரின் அதிரடியால் மும்பை அணி 207 ரன்களை குவித்தது. இதையடுத்து, 208 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு அடிமேல் அடி விழுந்தது என்றே கூறலாம்.
போட்டியின் முதல் ஓவரிலே கேப்டன் பெத்மூனி ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். இது குஜராத் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதையடுத்து, களமிறங்கிய ஹர்லீன் தியோல் டக் அவுட்டாகினார். அடுத்து ஆபத்து மிகுந்த வீராங்கனையான ஆஷ் கார்ட்னரும் டக் அவுட்டாகினார். தொடக்க வீராங்கனை மேக்னாவும் 2 ரன்களுக்கு அவுட்டாகினார்.
5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தது. வெளிநாட்டு வீராங்கனை அனபெல் சதர்லேண்ட் 6 ரன்களில் அவுட்டாக, ஒவ்வொரு வீராங்கனையாக நடையை கட்டினார். குஜராத்தின் நிலையை பார்த்தபோது அவர்கள் 50 ரன்களாவது எடுப்பார்களா என்ற நிலை ஏற்பட்டது. ஏனென்றால், ஜார்ஜியா 8 ரன்களிலும், ஸ்னே ராணா 1 ரன்னிலும், தனுஜா டக் அவுட்டாகியும் வெளியேறியதால் 27 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு குஜராத் சென்றது.
விக்கெட்டுகள் விழுந்தாலும் ஒரு முனையில் ஆறுதல் அளிக்கும் விதமாக ஹேமலதா பேட்டிங் செய்தார். யாருடைய பேட்டில் இருந்தும் ரன்களே வராத நிலையில், ஹேமலதா மட்டும் சிக்ஸர்களை விளாசி குஜராத் ரசிகர்களுக்கு ஆறுதல்படுத்தினார் அவருக்கு ஒத்துழைப்பு தந்த ஜோஷி. 6 ரன்களில் அவுட்டானார். ஒரு வழியாக குஜராத் அணி 50 ரன்களை கடந்தது. 9 விக்கெட்டுகளை இழந்து குஜராத் தடுமாறிய பிறகு ரிட்டையர்ட் ஹட் ஆகிய பெத்மூனி களமிறங்கவில்லை. இதனால், மும்பை அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சைகா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
முன்னதாக, மும்பை அணிக்காக பேட்டிங் செய்த மேத்யூஸ் 31 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 47 ரன்களும், ஹர்மன்பீரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 65 ரன்களும், அமெலியா 24 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 45 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணி பீல்டிங்கிலும் மிகவும் சொதப்பலாகவே செயல்பட்டனர்.