இந்திய கிரிக்கெட் அணியில் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சமீபத்தில் புதிய தலைமை பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அழைப்பு விடுத்தது. கடைசி நாளில் அப்ளை செய்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை, புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்து பிசிசிஐ சற்று முன் அறிவித்துள்ளது. 






இந்நிலையில், இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதை நான் பெரிய கெளரவமாக நினைக்கின்றேன். மேலும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்திய அணியுடனான இந்த பயணத்தை எதிர்ப்பார்த்திருக்கிறேன். ரவி சாஸ்திரி அவர்களின் தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இந்திய அணியுடன் சேர்ந்து இதை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பணியாற்றுவேன்” என டிராவிட் தெரிவித்திருக்கிறார்.






ராகுல் டிராவிட் ஏற்கனவே இந்திய ஏ அணியின் பயிற்சியாளராகவும், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அவரது பயிற்சியின் கீழ் பயிற்சி பெற்ற சுப்மான் கில், பிரித்விஷா உள்ளிட்ட பல வீரர்களும் தற்போது இந்திய அணியிலும் இடம்பிடித்து ஆடி வருகின்றனர். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்கான ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணிக்கும் ராகுல் டிராவிட்டே பயிற்சியாளராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் டிராவிட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். இவரது தலைமையில் இந்திய அணி 2007ம் ஆண்டு உலககோப்பை போட்டியில் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண