ஒரு டெஸ்ட் போட்டியில் தனி நபர் எடுத்த அதிக பட்ச ரன்னான 400 ரன்களை முறியடிக்க இந்திய வீரர் சுப்மன் கில்லால் முடியும் என்று பிரைன் லாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
பிரைன் லாரா:
கடந்த 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 2006 ஆம் ஆண்டு அதே பாகிஸ்தான் அணிக்கு எதிராக தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடியவர் பிரைன் லாரா. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த பிரைன் லாரா. இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 11,953 ரன்களை குவித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 400 ரன்கள் எடுத்துள்ளார். 34 சதம், 9 இரட்டை சதம் மற்றும் 48 அரைசதங்களையும் குவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கரைப் போல் புகழ் பெற்ற வீரர் பிரைன் லாரா.
இந்நிலையில், ஒரு டெஸ்ட் போட்டியில் தனி நபர் எடுத்த அதிக பட்ச ரன்னான 400 ரன்களை முறியடிக்க இந்திய வீரர் சுப்மன் கில்லால் முடியும் என்று பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில் கிரிக்கெட்டை ரூல் செய்வார்:
இது குறித்து பிரைன் லாரா பேசுகையில், “சுப்மன் கில்லால் என்னுடைய இரண்டு சாதனைகளை முறியடிக்க முடியும். இந்த புதிய தலைமுறை வீரர்களில் கிரிக்கெட்டை திறமையாக கையாளும் வீரர்களில் ஒருவராக கில் இருக்கிறார். வருங்காலங்களில் அவர் தான் கிரிக்கெட்டை ரூல் செய்வார். தற்போதுள்ள வீரர்களில் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். உலக கோப்பையில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றாலும் இதுவரை அவர் விளையாடி இருக்கும் விதத்தை பார்க்கையில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்துள்ள அவர் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமும் அடித்துள்ளார். அதேபோன்று ஐபிஎல்லிலும் சதம் அடித்திருக்கிறார்.இப்படி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் இனிவரும் ஐ.சி.சி தொடர்களிலும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்துவார். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய 400 ரன்கள் சாதனையை அவரால் நிச்சயம் கடக்க முடியும். அதுமட்டும் இன்றி ஒருவேளை அவர் கவுண்டிக்கு சென்று விளையாடினால் அங்கு என்னுடைய 501 ரன்கள் சாதனையையும் அவரால் முறியடிக்க முடியும்” என்று பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 966 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 44 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 2271 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களும், ஒரு நாள் போட்டியில் 6 சதங்களையும் 1 இரட்டை சதங்களையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.