ஆசிய கோப்பை 2023 இன் 5வது போட்டி இந்தியா மற்றும் நேபாளம் இடையே தற்போது கண்டி பல்லேகெலே கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வர்ணனையாளர் குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் கெளதம் கம்பீரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டியின் போது, ​​கம்பீர் மைதானத்திற்குள் சென்று கொண்டிருந்த போது, ​​பார்வையாளர்கள் கோலி-கோலி என கோஷங்களை எழுப்பினர். இதற்கு கோபமாக பதிலளித்த கம்பீர், நடுவிரலை காட்டினார்.






2013 இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் தொடங்கிய சண்டையால் கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இடையேயான உறவு மோசமடைந்தது. இதற்குப் பிறகு, ஐபிஎல் 16வது சீசனிலும், ஐபிஎல் போட்டியின்போது கம்பீர் - கோலி இடையே களத்தில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த போட்டியில் கோலி ஆர்சிபி அணிக்காக விளையாடி கொண்டிருந்த போது, ​​லக்னோ அணிக்கு கம்பீர் வழிகாட்டியாக இருந்து வந்தார். ஆப்கானிஸ்தான் வீரர் நவீன், லக்னோ அணிக்காக விளையாடியபோது கோலிக்கு அவருக்கு இடையே வாக்குவாதம் ஈடுபட்டது. அந்த போட்டி முடிந்தபிறகு லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் நவீனை அழைத்து கோலியிடம் பேச சொன்னார். அப்போது, அவர் மதிக்காமல் சென்று விட்டார். அப்போது, கோலி இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேயர்ஸிடம் பேசிகொண்டு இருந்தார். அந்தநேரத்தில் அங்கே வந்த கம்பீர் கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 


தற்போது இந்த வீடியோவை அடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கம்பீரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பியபோது, ​​கம்பீர் அவரது ஆட்டத்தை விமர்சித்ததோடு, ஷாட் தேர்வு குறித்தும் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஒரு சிலர் சமூகவலைத்தளங்களில் கோலி என்று பார்வையாளர்கள் குரல் கொடுக்கவில்லை. அவர்கள் உண்மையில் தோனி.. தோனி.. என்ற கத்தினார்கள் என தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, 2011 உலகக் கோப்பை வென்றதற்கு தோனிதான் காரணம் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இதற்கு அணியில் இருந்த நாங்களும்தான் காரணம் என்று பலமுறை தோனியை விமர்சித்துள்ளார். 






இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான போட்டி குறித்து பேசுகையில், முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி, இந்தியாவுக்கு 50 ஓவர்களில் 231 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, பந்து வீச்சில் அசத்தினார்கள். சூப்பர்-4 சுற்றுக்கு இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம்.