Gautam Gambhir Salary: இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீருக்கு, நாளொன்றிற்கு 21 ஆயிரம் ரூபாய் அலவன்ஸாக கொடுக்கப்படுகிறது.


கம்பீர் பயிற்சியாளராக நியமனம்:


2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற, இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்த கவுதம் கம்பீர் தற்போது அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் பார்படாஸில் நடந்த T20 உலகக் கோப்பை போட்டியுடன், அந்த பதவியில் இருந்த டிராவிட்டின் பணிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கம்பீர், ஜூலை 27ம் தேதி தொடங்க உள்ள இலங்கை சுற்றுப்பயணத்தின் முதல் இந்திய அணியுடன் சேர்ந்து பணியாற்ற உள்ளார்.


கம்பீர் பெருமிதம்:


பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து கம்பீர் வெளியிட்ட அறிக்கையில், “எனது மூவர்ணக்கொடி, எனது மக்கள், எனது நாட்டிற்கு சேவை செய்வது ஒரு முழுமையான மரியாதை. ராகுல் டிராவிட் மற்றும் அவரது துணைப் பணியாளர்கள் அணியுடன் முன்னுதாரணமாக இயங்கியதற்காக நான் இந்தச் சந்தர்ப்பத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பதில் நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.  நான் விளையாடும் நாட்களில் இந்திய ஜெர்சியை அணிந்தேன், இந்த புதிய பாத்திரத்தை நான் ஏற்கும்போது அது வித்தியாசமாக இருக்காது. மிக முக்கியமாக, வீரர்கள், வரவிருக்கும் போட்டிகளில் வெற்றியை அடைய நாங்கள் உழைப்போம்" என தெரிவித்து இருந்தார்.


கம்பீரின் சம்பளம் எவ்வளவு?


கம்பீர் தான் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் என்பது பல நாட்களுக்கு முன்பே இறுதியாகிவிட்டதாகவும், ஆனால் ஊதியம் பற்றிய பேச்சுவார்த்தையால் தான் அறிவிப்பு வெளியாவதில் தாமதம் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், புதிய பயிற்சியாளரின் ஆண்டு ஊதியம் எவ்வளவு என்பது தொடர்பான சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஊடக அறிக்கைகளின்படி, முன்னாள் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஆண்டு சம்பளமாக ரூ.12 கோடி பெறுகிறார். அதை விட கம்பீர் கூடுதலாக பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, அவர் பல சலுகைகளுக்கு பெறவும் தகுதி பெற்றுள்ளார்.


கம்பீருக்கு பிசிசிஐ வழங்கும் சலுகைகள்..!


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவருக்கு,  ஆண்டு சம்பளம் மட்டுமே ஒரே பலன் அல்ல. 2019 ஆம் ஆண்டில், வாரியம் அதன் தினசரி கொடுப்பனவுக் கொள்கையைத் திருத்தியது. அதன்படி,  பயிற்சியாளருக்கு பணியின்போது நாளொன்றிற்கு இந்திய மதிப்பில் சுமார் 21 ஆயிரம் ரூபாயை அலவன்ஸாக கொடுக்கிறது. அதுவே வெளிநாட்டு பயணத்தின் போது இந்த தொகை இரட்டிப்பாக வழங்கப்படும்.  பிசினஸ் கிளாஸ் விமான பயணம், தங்குமிடம் மற்றும் சலவை ஆகிய செலவுகளையும் பிசிசிஐ நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும். இந்திய அணி தொடர்பான பணியில் இருக்கும் போது உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவம் மற்றும் தங்குமிடத்தைப் பெறவும் கம்பீர் தகுதி பெற்றுள்ளார்.