இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை கண்டுபிடிப்பது பிசிசிஐக்கு நாளுக்குநாள் பெரிய சவாலை கொடுத்து வருகிறது. புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களுக்கான காலக்கெடு இன்னும் ஒரு வாரத்துக்கும் குறைவாக உள்ளதால், யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கேள்வி உலா வருகிறது. 


ஆதாரங்களின்படி, கௌதம் கம்பீர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), ஸ்டீபன் ப்ளெமிங் (சென்னை சூப்பர் கிங்ஸ்), ஜஸ்டின் லாங்கர் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) மற்றும் மஹேலா ஜெயவர்த்தனே (மும்பை இந்தியன்ஸ்) ஆகியோர் அந்தெந்த அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வரும் நிலையில், இவர்களை யாரையாவது பிசிசிஐ தலைமை பயிற்சியாளராக நியமிக்க திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து, வாரியத்தின் செயல்பாட்டுக் குழு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சியாளர்களுடன் பேசவும், அவர்களுக்கு தலைமை பயிற்சியாளராக இருக்க ஆர்வமாக உள்ளதா என சரிபார்க்கவும் முயற்சித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 






மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா பெயரும் இந்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அடிபடுகிறது. ஐபிஎல்லில் இவர்கள் அனைவரும் பயிற்சியாளர்களாக செயல்படுவதால், இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவது கடினமாக உள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால், ஊடக அறிக்கையின்படி, கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால், அவர் தனது பதவிக்காலம் முடியும்வரை வேறு எந்தவொரு கிரிக்கெட் கிளப்பிற்கும் பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ இருக்க முடியாது. அடுத்த 2027 ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை ஆண்டுக்கு 10 மாதங்கள் அணியுடன் பயணிக்க வேண்டும் என்பது ஒரு பெரிய பிரச்சனை. ஐபிஎல் பணியில் ஈடுபடாதவர் தற்போதைய என்சிஏ தலைவர் வி.வி.எஸ் லட்சுமண் மட்டுமே. 


இருப்பினும், கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு லட்சுமண் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க தயக்கம் காட்டியுள்ளார் என்றாலும், அவரை நிர்வாக குழு இன்னும் நிராகரிக்கவில்லை. 


கம்பீருக்கு முதலிடம்: 


கிடைத்த தகவலின்படி, பிசிசிஐயின் விருப்பப்பட்டியலில் கம்பீர் தற்போது முதலிடத்தில் இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ஐபிஎல் இறுதிப்போட்டி முடிந்தபிறகு, கம்பீருடன் பிசிசிஐ அதிகாரிகள் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


டிராவிட் மீண்டும் பயிற்சியாளராக விரும்பவில்லை:


2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு பிசிசிஐ உடனான ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் காலாவதியானது.  ஆனால் அப்போது பிசிசிஐ ராகுல் டிராவிட்டை குறைந்தபட்சம் 2024 T20 உலகக் கோப்பை வரை தொடர வேண்டும் என வலியுறுத்தியது. இருப்பினும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, டிராவிட் தலைமை பயிற்சியாளராக வேண்டும் என விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், டிராவிட் இப்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவதால் மீண்டும் பயிற்சியாளராக விரும்பவில்லை என்று அறிக்கை கூறுகிறது.