கோலி உடன் என்ன பிரச்சினை, இந்திய அணியில் நடக்கும் தவறுகள் உள்ளிட்டவை தொடர்பாக, முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வெளிப்படையாக பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.


குவியும் விமர்சனங்கள்:


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி கண்ட படுதோல்வி தொடர்பாக பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மூத்த வீரர்கள் இந்திய அணி செய்த தவறுகள் என்ன என்பதை சுட்டிக்காட்டி வருகின்றனர். சிலர் காட்டமான விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியில் நிலவும் சில பிரச்சினைகள் தொடர்பாக, முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.


நான் ஏன் சண்டை போட்றேன்?


தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மைதானத்தில் வீரர்களுடன் மோதலில் ஈடுபடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கம்பீர் “கிரிக்கெட் மைதானங்களில் நான் பல்வேறு சண்டைகளில் ஈடுபட்டுள்ளேன். ஆனால், அவை அனைத்தும் மைதானங்களில் மட்டுமே நடைபெறும். எத்தனையோ பேர் எத்தனையோ பேசுகின்றனர்,.டிஆர்பிக்காக என்னிடம் இண்டர்வியூ கேட்கின்றனர். ஆனால், அவை அநாவசியாமனது. அங்கு நடைபெறுவது இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடைபெறும் வாக்குவாதம் மட்டுமே. மைதானத்திற்கு வெளியே நடந்தால் மட்டுமே சண்டை, ஆனால் அங்கு நடப்பது தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என விரும்பும் இருவருக்கு இடையே நடைபெறும் வாக்குவாதம் மட்டுமே.


கோலி, தோனியுடன் பிரச்னை?


கோலி மற்றும் தோனியை நான் ஒரே அளவில் தான் மதிக்கிறேன். அவர்கள் உடனான எனது சண்டை தனிப்பட்டது அல்ல. அது போட்டியை பற்றியது. போட்டியில் வெல்ல வேண்டும் என அவர்கள் நினைப்பது போலவே நானும் நினைக்கிறேன். அந்த சண்டை மைதானத்திற்குள் மட்டுமே இருக்கும். நான் அனைவரையும் மதிக்கிறேன். என்னுடன் விளையாடிய மற்றும் இந்திய அணிக்காக விளையாடிய அனைத்து வீரர்களையும் நான் மதிக்கிறேன்.


ரசிகர்களின் பிரச்சினை என்ன?


நமது நாடு ஒரு அணியின் மீது பற்றுகொண்ட நாடாக இல்லை. மாறாக தனிநபர் மீது அதிக பற்றுகொண்டுள்ளது. தனிப்பட்ட நபர்கள் தான் அணியை காட்டிலும் பெரியவர்கள் என நாம் கருதுகிறோம். ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில், எந்தவொரு தனிநபரையும் அணியை காட்டிலும் பெரிதாக போற்றுவதில்லை. பிசிசிஐ நிவாகத்தின் பங்குதாரர்களாக உள்ள ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஊடகத்தை சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட வீரர்களின் மக்கள் தொடர்பு அதிகாரிகளை போன்று செயல்படுகின்றனர். குறிப்பிட்ட 3 பேரை மட்டுமே நாள் முழுவதும் மக்களுக்கு காட்டுகின்றனர். ஒரு நபரை மட்டும் தொடர்ந்து காட்டுவதால் அவர் மட்டும் தான் நட்சத்திர வீரர் என மக்கள் கருதுகின்றனர். மற்ற வீரர்களுக்கான மதிப்பு கிடைக்காமல் போகிறது” என கம்பீர் பேசியுள்ளார்.


”ஹீரோ வழிபாடு வேண்டாமே”


இதுதொடர்பாக ஏற்கனவே ஒருமுறை பேசிய கம்பீர் “ இந்திய அரசியல் ஆனாலும் கிரிக்கெட் ஆனாலும், தனி ஒரு நபரை தெய்வமாக வழிபடுவதை விட்டொழிய வேண்டும்” என வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.