ஐசிசி அடுத்ததாக நடத்தும் 2023-2025ம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான, போட்டி அட்டவணை பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
டி-20 போட்டிகளின் ஆதிக்கத்தால், கிரிக்கெட் போட்டிகளின் முதல் அத்தியாயமான டெஸ்ட் போட்டிகள் மீதான ஈர்ப்பு ரசிகர்களிடையே வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து நீண்ட நாள் முயற்சிகளுக்குப் பிறகு, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு நடத்தப்படுவதை போன்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
2021-ல் அறிமுகம்:
அதன்படி, 2019ம் ஆண்டு தொடங்கிய முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இந்திய அணி தோல்வியுற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அதைதொடர்ந்து, நடைபெற்று வரும் இரண்டாவது உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி முன்னேறியது. ஆனால், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்திக்கும் சூழலில் உள்ளது.
அட்டவணை வெளியீடு..!
இந்நிலையில் தான், மூன்றாவது முறையாக நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக ஒவ்வொரு அணியும் 6 தொடர்களில் விளையாட வேண்டியுள்ளது. அதில் 3 தொடர்கள் உள்நாட்டிலும் 3 தொடர்களை வெளிநாட்டிலும் விளையாட வேண்டும். இந்த சுழற்சிக்கான முதல் தொடராக, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள ஆஷஷ் தொடர் உள்ளது. வரும் 16ம் தேதி தொடங்க உள்ள இந்த தொடரில் 5 போட்டிகள் நடைபெற உள்ளன.
அணிகளுக்கான போட்டிகள்:
2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் சுற்றில் அதிகபட்சமாக, ஆஸ்திரேலிய அணி 6 தொடர்களில் 21 போட்டிகளை விளையாட உள்ளது. அதைதொடர்ந்து இந்திய அணி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. தொடர்களானது 2 போட்டிகள் முதல் 5 போட்டிகள் வரை கொண்டது என வேறுபடலாம். போட்டிகளின் எண்ணிக்கை மாறுபட்டாலும், தொடர்களை கைப்பற்றுவதன் அடிப்படையிலேயே புள்ளிகள் வழங்கப்படும்.
புள்ளிகள் எப்படி?
ஒரு வெற்றிக்கு 12 புள்ளிகள், ஒரு டிராவிற்கு நான்கு புள்ளிகள் மற்றும் ஒரு டைக்கு ஆறு புள்ளிகள் வழங்கப்படும். 6 தொடர்களின் முடிவில் ஒவ்வொரு அணிகளும் பெறும் புள்ளிகளின் அடிப்படையில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்திய அணிக்கான தொடர்கள்:
2023-2025ம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப்பில் இந்திய அணி உள்ளூரில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு எதிராக விளையாட உள்ளது. அதேநேரம், அஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.