கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் அனுபவ பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், அஸ்வின் போன்ற திறமையான பந்துவீச்சாளர்கள் தனது திறமையை வெளிப்படுத்துவதற்கு பிட்ச்சின் சூழ்நிலைகளை மட்டும் நம்பியிருக்க மாட்டார்கள் என சச்சின் டெண்டுல்கள் வெளிப்படையாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


போட்டி சுருக்கம்: 


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர். 


அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 296 ரன்களில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரஹானே 89 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் அடித்து டிக்ளெர் செய்தது. இதன் காரணமாக இந்திய அணி 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 


இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 234 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களை இழந்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 


அஸ்வினை எடுக்காதது பற்றி பேசிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், மேகமூட்டமான சூழ்நிலை காரணமாக நான்காவது வேகப்பந்து வீச்சாளரை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என தெரிவித்தார். 


சச்சின் டெண்டுல்கர் விமர்சனம்: 


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துகள்.






ஸ்டீவ்ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் போட்டியை தங்களுக்கு சாதகமாக மாற்ற முதல் நாளிலேயே உறுதியான அடித்தளத்தை அமைத்தனர். ஆட்டத்தில் நிலைத்திருக்க இந்தியா முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் பேட்டிங் செய்ய வேண்டியிருந்தது, ஆனால் அவர்களால் முடியவில்லை. டீம் இந்தியாவிற்கு சில நல்ல தருணங்கள் இருந்தன. தற்போது உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்து வீச்சாளராக இருக்கும் ரவிசந்திரன் அஸ்வின் ஆடும் லெவன் அணியில் விலக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 


திறமை வாய்ந்த ஸ்பின்னர்கள், திருப்பம் ஏற்படுத்தும் பிட்ச் வேண்டும் என எதிர்பார்க்கமாட்டார்கள். பந்துவீசும்போது நிலவும் காற்று, பிட்ச்சில் உள்ள பவுன்ஸை பயன்படுத்தி பவுலிங்கில் புதிய மாற்றத்தை காட்டுவார்கள். ஆஸ்திரேலிய அணியின் டாப் 8 பேட்ஸ்மேன்களில் 5 பேர் இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதை மறந்துவிட கூடாது என சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 
 


2021- 23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரவிசந்திரன் அஸ்வின் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 61 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.