Gujarat Titans Sale: குஜராத் டைட்டன்ஸ் அணியின் விலை சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் தொடங்கி, 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


விற்பனைக்கு வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி..!


இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் இடம்பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியை, அதன் உரிமையாளரும் தனியார் பங்குச்சந்தை நிறுவனமுமான சிவிசி கேபிடல் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  குஜராத் டைட்டன்ஸின் கட்டுப்பாட்டுப் பங்குகளை வாங்க,  அதானி குழுமம் மற்றும் டோரண்ட் குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. CVC நிறுவனம் குறைந்த அளவிலான பங்குகளை மட்டுமே தக்கவத்துக்கொண்டு,  பெரும்பான்மையான பங்குகளை விற்பனை செய்ய தீவிரம் காட்டுவதாக தெரிகிறது. புதிய அணிகள் பங்குகளை விற்பதைத் தடுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) லாக்-இன் காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் முடிவடையும் நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியை விற்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.


அணியின் விலை எவ்வளவு?


குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தான் ஐபிஎல் தொடரில் அறிமுகமானது. அப்போது அந்த அணிக்கான உரிமையை 5 ஆயிரத்து 625 கோடி ரூபாய்க்கு  CVC நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் தற்போது அந்த அணியின் மதிப்பு 1 பில்லியன் முதல் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை, அதாவது இந்திய மதிப்பில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 12 ஆயிரம் ரூபாய் கோடி வரை இருக்கும்   என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி “2021 இல் IPL இன் அகமதாபாத் உரிமையை சொந்தமாக்குவதற்கான வாய்ப்பை இழந்ததால், தற்போது அதானி மற்றும் டோரன்ட் இருவரும் குஜராத் டைட்டன்ஸின் பெரும்பான்மை பங்குகளை வாங்க தீவிரமாக போட்டியிடுகின்றனர். CVC க்கு, உரிமையில் அதன் பங்குகளை பணமாக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு” என தெரிவித்துள்ளார்.


பெருநிறுவனங்களின் ஆர்வம் ஏன்?


ஐபிஎல் போட்டி அறிமுகமானதிலிருந்தே அபார வளர்ச்சியை கண்டுள்ளது. உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும், இதனை சார்ந்த வணிகம் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. திடமான பணப்புழக்கங்களுடன் கவர்ச்சிகரமான சொத்தாக ஐபிஎல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இதனால் தான் ஐபிஎல் உரிமையாளர்கள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். கெளதம் அதானி ஏற்கனவே பெண்கள் பிரீமியர் லீக் (WPL) மற்றும் UAE-brd இன்டர்நேஷனல் லீக் T20 ஆகியவற்றில் அணிகளை வாங்குவதன் மூலம் கிரிக்கெட்டில் முதலீடு செய்துள்ளார். 2023 ஆம் ஆண்டில், அதானி WPL இன் அகமதாபாத் உரிமையை  ஆயிரத்து 289 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


ஐபிஎல் தொடரில் குஜராத் அணி:


கடந்த 2022ம் ஆண்டு முதல்முறையாக ஐபிஎல் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி களமிறங்கி கோப்பையை வென்று அசத்தியது. 2023ம் ஆண்டு போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறினாலும், கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. நடப்பாண்டு கில் தலைமையில் களமிறங்கிய குஜராத் அணி, லீக் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.