ஆசியக்கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிராக சதம் விளாசியதன் மூலம், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.


ஆசியக்கோப்பை:


6 அணிகள் பங்கேற்கும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதையடுத்து நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 342 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 151 ரன்களை குவித்தார். இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் அணி வெறும் 104 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம், பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டியில் அந்த அணி பெற்ற மூன்றாவது மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.


பாபர் அசாம் சாதனை:


இதனிடையே, பாபர் அசாம் 131 பந்துகளில் 151 ரன்களை விளாசியதன் மூலம் கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி, 



  • ஆசியக்கோப்பை தொடரில் தனிநபரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக கோலி அடித்த 183 ரன்கள் தான் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும்.  இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கானின் சாதனையை பாபர் அசாம் தகர்த்துள்ளார்

  • ஆசியக்கோப்பை தொடரில் 150 மற்றும் அதற்கும் அதிகமான ரன்களை ஒரு கேப்டன் அடிப்பது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, கடந்த 2014ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக கோலி அடித்த 136 ரன்கள் தான் கேப்டனால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆக இருந்தது

  • ஒருநாள் போட்டிகளில் பாபர் அசாம் 150 ரன்களை அடிப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த 2021ம் ஆண்டு 158 ரன்களை விளாசினார்.

  • தொடர்ந்து சிறப்பாக விளையாடியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார்

  • அபாரமான ஆட்டத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் பாபர் அசாமின் சராசரி 59.47 ஆக உயர்ந்துள்ளது. இது ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வீரரின் நான்காவது அதிகபட்ச சராசரி ஆகும். குறைந்தபட்சம் 2000 ரன்களை விளாசியவர்கள் பட்டியலில் உள்ள வீரர்களில், சிறந்த சராசரியுடன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.

  • நேற்றைய போட்டியில் அடித்தது பாபரின் 31வது சர்வதேச சதமாகும். இதன் மூலம், சர்வதேச போட்டிகளில் அதிக சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர்களின் பட்டியலில் ஜாவேத் மியான்டட் மற்றும் சயீத் அன்வர் ஆகியோரின் சதனையை சமன் செய்துள்ளார்.

  • இன்னும் ஒரு சதம் விளாசினால் சர்வதேச போட்டிகளில் அதிக சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர்களின் பட்டியலில் பாபர் அசாம் 4வது இடத்திற்கு முன்னேற்றம் காண்பார்.