சர்வதேச கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான டி20 உலகக் கோப்பை தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. முதல் சுற்றில் 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. முதல் சுற்றிலிருந்து 4 அணிகள் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்தச் சுற்று போட்டிகள் மிகவும் விறு விறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய உள்ளிட்ட அணிகளுக்கு நாளை முதல் பயிற்சி போட்டிகள் தொடங்க உள்ளன. இதனால் ஐபிஎல் முடிந்தது என்று கவலைப்படும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த சில நாட்கள் மீண்டும் கிரிக்கெட் திருவிழா விருந்தளிக்க காத்து கொண்டிருக்கிறது. 


 


இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில்  இந்திய கிரிக்கெட் அணி இன்று தனது முதல் பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளது. இந்தச் சூழலில் இதுவரை நடைபெற்றுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர்கள் யார் யார்?


 


5. தில்ஷன் (6):




இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் திலகரத்னே தில்ஷன் ஒரு அதிரடி ஆட்டக்காரர். இவர் 34 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று 6 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.  


 


4.ரோகித் சர்மா(6):




இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா. சமீப காலங்களில் இந்திய அணிக்கு அதிரடி தொடக்கம் அளிப்பதில் இவர் முக்கியமான பங்கு வகித்து வருகிறார். இவர் 25 டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 6 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். 


 


3. மகேலா ஜெயவர்தனே (7):




இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார். இவர் 31 டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 7 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். 


2. கிறிஸ் கெயில்(9):




டி20 போட்டிகளில் எப்போதும் அதிரடி காட்டும் யுனிவர்செல் பாஸ் கிறிஸ் கெயில் டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் தன்னுடைய அதிரடியை தொடர்ந்து காட்டியுள்ளார். இவர் 26 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 9 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். 


 


1. விராட் கோலி:(9)




இந்தப் பட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இவரும் கிறிஸ் கெயிலும் 9 அரைசதங்கள் அடித்திருந்தாலும் விராட் கோலி 16 இன்னிங்ஸில் அந்த 9 அரைசதங்களை அடித்துள்ளார். அத்துடன் தன்னுடைய சிறப்பான பேட்டிங் மூலம் பல அணிகளை விராட் கோலி திணறடித்துள்ளார். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இவர் மேலும் அரைசதம் அடிக்கும் பட்சத்தில் இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடிப்பார். 


மேலும் படிக்க: ஐபிஎல்.,யில் மாஸ்... டி-20 உலகக்கோப்பையில் தூசு... ஓரங்கட்டப்பட்ட வீரர்கள் யார்?