ஐபிஎல் தொடரை அடுத்து, டி-20 உலகக்கோப்பை தொடர் தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கிய போட்டிகள் நவம்பர் 14-ம் தேதி வரை நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி ஃபார்மில் இருக்கும் சில வீரர்களுக்கு டி-20 உலக்கோப்பையில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும்போதே டி-20 உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் வீரர்களின் விவரங்களை அணிகள் அறிவித்துவிட்டன. எனினும், கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என கால அவகாசம் அளிக்கப்பட்டபோதும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சில வீரர்கள் உலகக்கோப்பையில் விளையாட தேர்வாகவில்லை. 


ஐபிஎல் டு டி-20 உலகக்கோப்பை டிக்கெட்டை மிஸ் செய்த சில வீரர்கள் இதோ!


1. ருதுராஜ்


சிஎஸ்கேவின் தொடக்க வீரர் ருதுராஜ், இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். 16 போட்டிகளில் ஆடி 16 இன்னிங்சிலும் பேட் செய்து 635 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 101 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில், 1 சதம், 4 அரைசதங்களை அடித்துள்ளார்.


இந்த ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ருதுராஜ், மூன்றில் இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடினார். இதில், பெரிதாக சோபிக்காத அவர், 21, 14 ரன்கள் என ஸ்கோர் செய்து ஏமாற்றினார். ருதுவின் ஃபார்ம் ஐபிஎல் தொடரில்தான் அதிரடியாக இருந்ததால், இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கும்போது ரோஹித், ராகுல், இஷானை தேர்வு செய்து கொண்டது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம்.



2. டுப்ளெஸி


சிஎஸ்கேவின் மற்றொரு தொடக்க வீரரான டுப்ளெஸி, 16 போட்டிகளில் ஆடி 16 போட்டிகளிலும் பேட்டிங் செய்து 633 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றுள்ளார். இந்த தொடரில் மட்டும் டுப்ளெஸி 6 அரைசதங்களை அடித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான் இறுதிப்போட்டியில் 86 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அமைப்பிற்கும் டுப்ளெஸிக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளதால், முன்னாள் கேப்டனாக டுப்ளெஸியை டி-20 உலகக்கோப்பைக்கான ஸ்குவாடில் தேர்வு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


3. ஹர்ஷல் பட்டேல்


2021 ஐபிஎல் சீசனின் ஸ்டார் வீரர் என அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஹர்ஷல் பட்டேல். பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடும் அவர், ஹாட்-ட்ரிக், பர்பிள் கேப் என இந்த சீசனில் அசத்திவிட்டார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ரெக்கார்டுகள் இருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அவர் விளையாடிய அனுபவம் இல்லாததால் டி-20 உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வு செய்வதை தேர்வு குழு தவிர்த்திருக்கலாம். 



4. ஷிகர் தவான்


டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது பெரும்பாலானோருக்கு ஆச்சர்யமாக இருந்தது ஷிகர் தவான் அணியில் இடம்பெறவில்லை என்பதுதான். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனிலும், அதிரடியாக பேட்டிங் செய்த அவர், ஆரஞ்ச் கேப்புக்கான ரேஸிலும் இருந்தார். 16 இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்திருக்கிறார். எனினும், ஷிகர் தவானை மிஸ் செய்துவிட்டு ரோஹித் ஷர்மா, ராகுல், இஷான் கிஷன் என மூன்று ஓப்பனர்களை தேர்வு செய்துள்ளது பிசிசிஐ



5. சுனில் நரைன்


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற முக்கிய காரணமாக அமைந்த சுழற்பந்து வீச்சாளர்  சுனில் நரைன், டி-20 உலகக்கோப்பைக்கான் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெறவில்லை. 2021 ஐபிஎல் தொடரின் 14 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார் அவர்.



சர்ச்சைக்குரிய பெளலிங் ஆக்‌ஷன் மற்றும் சில காரணங்களால் 2019-ம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தேர்வு செய்யப்படாத அவர், டி-20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான ஃபிட்னெஸ் தேர்விலும் அவர் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண