டி20 உலகக் கோப்பையில் இன்று முதல் சூப்பர் 12 போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் நாளான இன்று ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியானா ஆஸ்திரேலிய-தென்னாப்பிரிக்கா போட்டி மிகவும் விறு விறுப்பாக அமைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. 


இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க முதலே இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 55 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன்மூலம் நடப்பு தொடரில் இரண்டாவது குறைவான ஸ்கோராக இது அமைந்துள்ளது. 


இந்நிலையில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிகவும் குறைவான ஸ்கோர் அடித்த அணிகள் யார் யார்? 


 


நெதர்லாந்து:(39)


2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து- இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 10.2 ஓவர்களில் 39 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. மெண்டிஸ் மற்றும் மெத்யூஸ் தலா  3 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இலங்கை 1 ஒரு விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 




நெதர்லாந்து:(44)


நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி தகுதிச் சுற்று போட்டியில் நெதர்லாந்து-இலங்கை அணிகள் மோதின. அதில் 10 ஓவர்களில் 44 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இலங்கை தரப்பில் லஹீரு குமார மற்றும் ஹசரங்கா தலா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இலங்கை அணி 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்ப்பிற்கு 45 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 


 


வெஸ்ட் இண்டீஸ்:(55)




நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது சூப்பர் 12 போட்டியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. அதில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 14.2 ஓவர்களில் 55 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் ரஷீத் 4 விக்கெட்டும், மொயின் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 8.2 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 56 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 


 


நியூசிலாந்து:(60)




2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி ட்ரென்ட் போல்ட் மற்றும் ஜிம்மி நீஷம் பந்துவீச்சில் குறைந்த ஸ்கோரை அடித்தது. 20 ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து 120 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ரங்கானா ஹெர்த சுழலில் சிக்கியது. அவர் 3.3 ஓவர்கள் வீசி 3 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் மட்டும் 42 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து அணி 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 


 அயர்லாந்து:(68)




2010ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. அதில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 139 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் சமி மற்றும் ரவி ராம்பால் தலா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். 


மேலும் படிக்க: 55 ரன்களில் சுருண்ட நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவு - வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து