துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தீய தீவுகள் அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்த போட்டி மறக்க வேண்டிய போட்டியாக மாறியது.
அணியின் ஸ்கோர் 8 ரன்களை எட்டிய போது தொடக்க வீரர் லீவிஸ் 6 ரன்களில் வெளியேறினார். மூன்றாவது ஓவரில் சிம்மன்சும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில் களமிறங்கினர். அவர் மட்டும் இறங்கியது முதல் பவுண்டரிகளை அடித்தார். 3 பவுண்டரிகளுடன் 13 பந்தில் 13 ரன்களை எடுத்திருந்த நிலையில் கெயில் மில்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதற்கு அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகளை விட வேகமாக சரிந்தது. ஹெட்மயர் 9 ரன்களிலும், ட்வெய்ன் ப்ராவோ 5 ரன்களிலும், நிகோலஸ் பூரன் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் பொல்லார்ட் அணியை கரை சேர்ப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் 6 ரன்களில் வெளியேறினார். ஆந்த்ரே ரஸல் ரன் ஏதுமின்றியும், மெக்காய் டக் அவுட்டாகியும், ராம்பால் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க மேற்கிந்திய தீவுகள் அணி 14.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்தின் அடில் ரஷீத் சிறப்பாக பந்துவீசி 2.2. ஓவர்களில் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொயின் அலி, டைமல் மில்ஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டன் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
120 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராயும், ஜோஸ் பட்லரும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவருமே அணியை வெற்றி பெற வைப்பார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் ஒரு சிக்ஸருடன் 11 ரன்கள் எடுத்திருந்த ஜேசன் ராய் ஆட்டமிழந்தார். பின்னர், களமிறங்கிய ஜானி பார்ஸ்டோ 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மொயின் அலி 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டனையும் மேற்கிந்திய தீவின் இளம் சுழற்பந்துவீச்சாளர் அகில் ஹூசைன் 1 ரன்னில் அற்புதமாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார். அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் விழுந்ததால் இங்கிலாந்து ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் மோர்கனும்- ஜோஸ் பட்லரும் அணியை வெற்றி பெற வைத்தனர். இதனால், இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 7 ரன்களுடனும், பட்லர் ஆட்டமிழக்காமல் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நடப்பு சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியை இங்கிலாந்து அணி 55 ரன்களில் சுருட்டியது மேற்கிந்திய தீவுகள் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்துள்ளது. நேற்றைய போட்டியில் நெதர்லாந்து அணி 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.