ஜிம்பாப்வேயின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் டெய்லருக்கு ஐசிசி ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறியதற்காக அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் மூன்றரை ஆண்டுகள் விளையாட அவருக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.


சர்வதேச கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐசிசி ஊழல் தடுப்பு சட்ட விதிகளை மீறியதற்காக டெய்லர் தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளதால், அவர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் வட்டாரத்தை உலுக்கிய மேட்ச் ஃபிக்சிங் கேப்டன்கள் பற்றிய அலசல் இதோ. ஹீத் ஸ்ட்ரீக் முதல் அசாருதீன் வரை, தடை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் - காரணம் என்ன?


1. ஹீத் ஸ்ட்ரீக் - ஜிம்பவே


ஐசிசி ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறியதற்காக அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் எட்டு ஆண்டுகள் விளையாட ஹீத் ஸ்ட்ரீக்கிற்கு ஐசிசி தடை விதித்தது. ஊழலில் ஈடுபட்டது, மற்ற வீரர்களை ஃபிக்சிங்கில் பங்கெடுக்க வற்புறுத்தியது, தகவல் பரிமாற்றம் செய்தது போன்ற பல குற்றங்களை செய்ததற்காக ஹீத் ஸ்ட்ரீக் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது.


2. முகமது அசாருதீன் - இந்தியா



கிரிக்கெட் உலகை பாதிக்க செய்த சம்பவங்களில் இதுவும் ஒன்று! கடந்த 2000-ம் ஆண்டு முன்னாள் இந்திய அணி கேப்டன் அசாருதீனுக்கு கிரிக்கெட்டில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டது, தென்னாப்ரிக்க அணி கேப்டன் ஹன்சி க்ராஞ்சை பெட்டிங் உலகிற்கு அறிமுகம் செய்தது போன்ற குற்றங்களுக்காக இவருக்கு தடைவிதிக்கப்பட்டது. எனினும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பின் 2012-ம் ஆண்டு அசாருதினுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து செய்யப்பட்டது.


3. முகமது அஷ்ரஃபுல் - வங்கதேசம்


இந்திய ப்ரீமியர் லீக் தொடரைப் போல, மற்ற நாடுகளிலும் டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில், 2013-ம் ஆண்டு நடந்த வங்கதேச ப்ரீமியர் லீக் தொடரின்போது ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதற்காக அவருக்கு 8 ஆண்டுகள் தடைவிதித்து உத்தரவிட்டது வங்கதேச கிரிக்கெட் அமைப்பு. பின்னர், 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.


4. மார்லன் சாமுவேல்ஸ் - வெஸ்ட் இண்டீஸ்


முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டனான மார்லன் சாமுவேல்ஸ், கடந்த 2017-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போது, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட தகவல்களை, பணம் வாங்கி கொண்டு புக்கிங் ஏஜெண்ட்டுகளுடன் பகிர்ந்து கொண்டார். இந்த குற்றத்திற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. 


5. பிரெண்டன் டெய்லர் - ஜிம்பாவே



ஒரு இந்திய தொழிலதிபருடனான சந்திப்பின் போது கொகெயின் எடுத்துக் கொண்டதன் மூலம் பிளாக்மெயில் செய்யப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார் பிரெண்டன். அதனை தொடர்ந்து, “அவர்களின் மிரட்டலால் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.  இரண்டு ஆண்டுகளுக்கு நடந்த இந்த சம்பவத்தை இப்போது வெளியுலகுக்கு தெரிவிக்கிறேன். இதனால், ஐசிசி என் மீது நடவடிக்கை எடுக்கும் என்று எனக்கு தெரியும், அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஐசிசி அவருக்கு அனைத்து கிரிக்கெட்டிலும் இருந்து தடை விதித்திருக்கிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண