டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 போட்டிகள் கடந்த சனிக்கிழமை தொடங்கின. இந்தச் சுற்று போட்டிகள் தொடங்கியது முதல் டி20 உலகக் கோப்பை தொடர் மிகவும் சூடுபிடிக்க தொடங்கியது. மைதானத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேவும் அந்த அனல் பறக்க தொடங்கியது. அதாவது ஒரு வாரத்திற்குள் பல சர்ச்சைகளை இந்த டி20 உலகக் கோப்பை தந்துள்ளது. அவை என்னென்ன?
முகமது ஷமி:
சூப்பர் 12 போட்டிகளின் இரண்டாவது நாளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த இரு அணிகளும் மோதும் போட்டி என்றாலே அதன் இறுதியில் ஒரு சர்ச்சை வர வாய்ப்பு அதிகம். அந்தவகையில் இம்முறை இந்திய கிரிக்கெட் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணியில் இடம்பெற்று இருந்த முகமது ஷமி மீது சமூக வலைதளங்களில் மத ரீதியிலான தாக்குதல் நடைபெற்றது.
அதில் பலரும் அவருடைய மதத்தை வைத்து அவர் காசு வாங்கி கொண்டு பந்துவீசினார் என்பன போன்ற குற்றச்சாட்டுகளை வைத்தனர். அதற்கு பல்வேறு இந்திய முன்னாள் வீரர்களும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விளையாட்டு மனிதர்கள் இணைக்கும் கருவியாக இருக்க வேண்டும் என்றும் பலர் தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் இன்று இந்திய கேப்டன் விராட் கோலியும் இது முதுகெலும்பு அற்றவர்களின் செயல் என்று சாடியுள்ளார்.
ஹர்பஜன் சிங்- முகமது அமீர்:
இந்தியா-பாகிஸ்தான் சூப்பர் 12 போட்டி நடைபெற்று முடிந்த பிறகு ட்விட்டரில் ஹர்பஜன் சிங் மற்றும் முகமது அமீர் இடையே வார்த்தை போர் நடைபெற்றது. முதலில் இந்திய அணி தோல்வி அடைந்தவுடன் ஹர்பஜன் சிங் தன்னுடைய டிவியை உடைத்திருப்பார் என்று கூறி முகமது அமீர் வம்புக்கு இழுத்தார். அதன்பின்னர் ஹர்பஜன் சிங் லார்ட்ஸ் டெஸ்டில் காசு வாங்கி கொண்டு நோபால் வீசியவர் என்று அவரை சாடினார்.
இவ்வாறு இருவரும் தொடர்ந்து மாறி மாறி ட்விட்டரில் வார்த்தை போரில் ஈடுப்பட்டு வந்தனர். இதுவும் பெரியளவில் சர்ச்சையானது.
குயிண்டன் டி காக்:
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பல்வேறு அணிகளும் இனவெறி தாக்குதலுக்கு எதிரான தங்களுடைய குரலை கொடுத்து வந்தனர். அந்தவகையில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக அனைத்து வீரர்களும் இதேபோல் மண்டியிட்டு பிளாக் லைவஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டது. அந்த அறிவிப்பை தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் குயிண்டன் டி காக் ஏற்க மறுத்தாக தகவல் வெளியானது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்திருந்ததாக கூறப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்தப் போட்டிக்கு பிறகு குயிண்டன் டி காக், “நான் இனவெறி தாக்குதலை எப்போதும் ஏற்பவன் அல்ல. என்னுடைய குடும்பத்திலும் கருப்பினத்தவர் உள்ளனர். ஆகவே நான் ஒருபோதும் அந்த தாக்குதலுக்கு ஆதரவு தரமாட்டேன். நான் வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் விளையாடாதது அதற்காக இல்லை” என்று ஒரு அறிக்கை வெளியிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சோயிப் அக்தர்:
நடப்பு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தன்னுடைய இரண்டாவது சூப்பர் 12 போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியின் முடிவிலும் ஒரு சர்ச்சை வந்தது. ஆனால் அதற்கும் அந்தப் போட்டிக்கும் தொடர்பு இல்லை. அந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விவாதத்தின் போது அந்நாட்டு கிரிக்கெட் தொகுப்பாளர் நவ்மன் நாஸ் என்பவருக்கும் சோயிப் அக்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே சோயிப் அக்தர் வெளியேறினார்.
அதன்பின்னர் அந்த சம்பவம் தொடர்பாக சோயிப் அக்தர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெளிவுப்படுத்தினார். அதில், ““நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல விதமான வீடியோக்கள் வலம் வருகின்றன. அதனால் அந்த விவகாரத்தை தெளிவுப்படுத்த வேண்டியது என்னுடைய கடமை. நேற்று விவாதத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து நானும் சக வீரர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தோம். அந்த நிகழ்ச்சியில் நாவ்மன் நாஸ் என்னை சற்று மட்டம் தட்டிய வகையில் பேசினார். அதற்கு அவர் நிகழ்ச்சியிலேயே ஒரு சிறிய மன்னிப்பு கேட்டிருந்தால் நான் தொடர்ந்து இருப்பேன். அவர் அதை மறுக்கவே நான் அந்த நிகழ்ச்சியில் இருந்த மற்றவர்களுக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் உடனே வெளியேறினேன். அதற்கு மேல் அங்கு இருந்து ஒரு தர்ம சங்கடமான சூழலை உருவாக்க நான் விரும்பவில்லை” எனக் கூறியிருந்தார்.
இவ்வாறு சூப்பர் 12 போட்டிகள் தொடங்கிய முதல் வாரத்திலேயே இப்படி நிறையே சர்ச்சைகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 'அது முதுகெலும்பு இல்லாதவர்களின் செயல்'- ஷமி மீதான தாக்குதல் குறித்து பேசிய விராட் கோலி !