தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 327 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வழக்கம் போல் இந்திய அணியின் பேட்டிங் இந்தப் போட்டியிலும் சொதப்பியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணி தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. எந்தெந்த போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்துள்ளது தெரியுமா?
73/8 vs நியூசிலாந்து(கிறிஸ்ட்சர்ச் 2020):
2020ஆம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்தது. இந்தத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்தது. புஜாரா மற்றும் விராட் கோலி மட்டும் 20 ரன்களுக்கு மேல் அடித்தனர். இந்த இன்னிங்ஸில் 51/2 இருந்த இந்திய அணி 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதாவது கடைசி 8 விக்கெட்டை வெறும் 73 ரன்களுக்கு இழந்தது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது.
36/9 vs ஆஸ்திரேலியா(அடிலெய்டு 2020):
2020ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்தது. இந்தத் தொடரின் முதல் போட்டி அடிலெய்டு நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி 53 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. ஹேசல்வூட் மற்றும் கம்மின்ஸ் பந்துவீச்சில் இந்திய அணி 45 நிமிடங்களில் சுருண்டது. ஹேசல்வூட் 8 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி 36 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்தது. 90 ரன்கள் என்ற இழக்கை ஆஸ்திரேலியா எளிதாக சேஸ் செய்து வெற்றி பெற்றது.
68/6 vs நியூசிலாந்து(சவுதாம்ப்டன் 2021):
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 149 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது. அதன்பின்னர் வந்த வீரர்கள் யாரும் சரியாக ஆடாத காரணத்தால் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதாவது 68 ரன்களுக்கு 6 விக்கெட்களையும் இழந்தது. அந்தப் போட்டியில் தோல்வி அடைந்து சாம்பியன் பட்டத்தை இந்திய அணி தவறவிட்டது.
22/7 மற்றும் 63/8 vs இங்கிலாந்து (லீட்ஸ் 2021):
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 21/3 என் இருந்தது. அப்போது ரஹானே மற்றும் ரோகித் களத்தில் இருந்தனர். ரஹானே ஆட்டமிழந்த போது இந்திய அணி 56 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் கடைசி 7 விக்கெட்களையும் வெறும் 22 ரன்களுக்கு இழந்தது. அதேபோல் அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 215/2 என இருந்த இந்திய அணி 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்து மோசமாக தோல்வி அடைந்தது.
55/7 vs தென்னாப்பிரிக்கா(செஞ்சுரியன் 2021):
தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி மோசமான பேட்டிங் செய்தது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 272/3 என இருந்த இந்திய அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதாவது கடைசி 7 விக்கெட்களையும் 55 ரன்களுக்கு இழந்தது ஏமாற்றியது.
மேலும் படிக்க: ரபாடா, ஜென்சன் வேகத்தில் சுருண்ட இந்தியா- தென்.ஆப்பிரிக்காவிற்கு 305 இலக்கு