சர்வதேச கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான டி20 உலகக் கோப்பை தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. முதல் சுற்றில் 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. முதல் சுற்றிலிருந்து 4 அணிகள் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்தச் சுற்று போட்டிகள் மிகவும் விறு விறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய உள்ளிட்ட அணிகளுக்கு பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 


நேற்று நடைபெற்ற முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. அதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நாளை நடைபெறும் இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட உள்ளது.  இந்தச் சூழலில் இதுவரை நடைபெற்றுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார் யார்?


5.ஏபி டிவில்லியர்ஸ் (717):




தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ். இவரை ரசிகர்கள் ‘மிஸ்டர் 360’ என்று அழைப்பார்கள். இவர் டி20 உலகக் கோப்பையில் 29 இன்னிங்ஸில் விளையாடி 717 ரன்கள் அடித்துள்ளார். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இவர் இல்லாதது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் உள்ளது. 


4.விராட் கோலி (777):




இந்தப் பட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி நான்காம் இடம் பிடித்துள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 16 இன்னிங்ஸில் விளையாடி உள்ள விராட் கோலி 777 ரன்கள் அடித்துள்ளார். அத்துடன் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 9 அரைசதம் கடந்து இவர் அசத்தியுள்ளார். அந்தப் பட்டியலில் இவர் தான் முதலிடம் பிடித்துள்ளார்.  


 


3.தில்ஷன் (897):




இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் திலகரத்னே தில்ஷன் ஒரு அதிரடி ஆட்டக்காரர். இவர் 34 டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 897 ரன்கள் எடுத்துள்ளார்.  அத்துடன் இவர்  6 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.  


2. கிறிஸ் கெயில்(920):




டி20 போட்டிகளில் எப்போதும் அதிரடி காட்டும் யுனிவர்செல் பாஸ் கிறிஸ் கெயில் டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் தன்னுடைய அதிரடியை தொடர்ந்து காட்டியுள்ளார். இவர் 26 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 920 ரன்களை இவர் விளாசி உள்ளார். மேலும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 9 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். 


1. மகேலா ஜெயவர்தனே (1016):




இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார். இவர் 31 டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 1016 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அத்துடன் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். 


இந்தப் பட்டியலில் தற்போது கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலி மட்டுமே நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளனர். ஆகவே இவர்கள் இருவரும் இந்த அதிக ரன்கள் பட்டியலில் முன்னேறும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கிறிஸ் கெயில் ஜெயவர்தனேவை இந்த முறை தாண்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்திய கேப்டன் விராட் கோலி வேகமாக 2ஆவது அல்லது மூன்றாவது இடத்திற்கு முன்னேறுவார் என்று கருதப்படுகிறது. 


மேலும் படிக்க: T 20 உலகக் கோப்பை ஜெர்சியை யாரு வடிவமைக்கிறாங்க தெரியுமா? ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள்..!